2014-08-04 16:30:47

திருத்தந்தை பிரான்சிஸ் - நம் தேவைகளைவிட, பிறரின் தேவைகளை முன்னிலைப்படுத்தியே நாம் செயலாற்றவேண்டும்


ஆக.04,2014. இயேசு நிகழ்த்திய 'அப்பம் பலுகுதல்' புதுமை, இரக்கம், பகிர்தல் மற்றும் திருநற்கருணை என்ற மூன்று அடையாளங்களை உள்ளடக்கி நிற்கிறது என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருப்பலி நற்செய்தியை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் தேவைகளைவிட, பிறரின் தேவைகளை முன்னிலைப்படுத்தியே நாம் செயலாற்றவேண்டும் என்பது இப்புதுமை வழியே இயேசு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்று கூறினார்.
நம்முடையத் தேவைகள் முக்கியமானதாக இருக்கின்றபோதிலும், எதுவும் இல்லாமல் துன்புறும் ஏழைகளின் தேவைகள்போல் அவசரமானதல்ல என்பதை ஏற்று, அவர்களுள் ஒருவராக நாமும் உணர்வதே உண்மையான இரக்கம் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.
ஏழைகள் தங்கள் சுமைகளை தாங்களே சுமக்கட்டும் என்று விட்டுவிட்டு பாராமுகமாய்ச் செல்வது, சுயநலப் போக்காகும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு அப்பத்தைக் கைகளில் எடுத்து வானத்தை அண்ணாந்துப் பார்த்து கடவுளைப் போற்றி மக்களுக்குப் பகிர்ந்தளித்தது திருநற்கருணையின் அடையாளமாக உள்ளது என்று கூறினார்.
திருநற்கருணையில் இயேசு வெறும் அப்பத்துண்டை மட்டும் கொடுக்கவில்லை, மாறாக, முடிவற்ற வாழ்வின் அப்பத்தை, அதாவது, தன்னையே வழங்குகிறார் என்று தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.