2014-07-31 16:53:20

பார்வையற்றோர் வாழ்வில் ஒளியேற்றும் நம்பிக்கை தீபம் - ஆர்பிட்(ORBIT)


ஜூலை,31,2014. தென்னிந்தியாவில், திருச்சிக்கருகே மிளகுபாறை பகுதியில் அமைந்துள்ள ஆர்பிட் (ORBIT - Organisation for Rehabilitation of the Blind In Trichy) என்கிற சிறு தொழிற்சாலை இந்தியாவின் முக்கிய ஆலைகளுக்கு தரமான, கடினமான உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வழங்குகிறது.
இந்த உதிரி பாகங்களை உற்பத்தி செய்பவர்கள் பார்வையற்ற தொழிலாளர்கள் என்பது, இத்தொழிற்சாலையின் சிறப்பு அம்சம். பார்வைத் திறன் உள்ளவர்களே செய்வதற்குத் தயங்கும் பல தொழில்நுட்பப் பணிகளை பார்வையற்ற தொழிலாளர்கள் செய்து முடிக்கின்றனர்.
1974-ம் ஆண்டு இந்த தொழிற் சாலையை உருவாக்கியவர் திருச்சியைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவர் ஜோசப் ஞானாதிக்கம். பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு முறையான பயிற்சியளித்தால் பல பணிகளை சிறப்பாக செய்யவைக்க முடியும் என நம்பிய அவர், அரசுக்குச் சொந்தமான இடத்தை நீண்டகால குத்தகைக்கு வாங்கி ஆர்பிட் என்ற சிறு தொழிற்சாலையை உருவாக்கினார்.
அவரது மறைவுக்குப் பிறகு திருச்சியிலுள்ள சேவை மனப் பான்மை கொண்ட 10 நபர்களை நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களாகக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது ஆர்பிட். இத்தொழிற்சாலையின் இலாபத்தில் 50 விழுக்காடு, தொழிலாளர்களுக்கும், 25 விழுக்காடு தொழிலக மேம்பாட்டுக்காகவும், 25 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காகவும் செலவிடப்படுகிறது.
திருச்சியிலுள்ள பாய்லர் ஆலைக்கு தேவையான உதிரி பாகங்களை உற்பத்தி செய்து தர ஆரம்பித்து இப்போது அறுபது விதமான உதிரி பாக உற்பத்தி பணிகளை செய்கிறது ஆர்பிட். பார்வையற்றவர்கள் 78 பேர் பணியில் ஈடுபட, அவர்களுக்கு உதவிபுரிய 22 மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு திருச்சி தொழிற்கூடம் இயங்கி வருகிறது.
40-வது ஆண்டை எட்டிப்பிடித்துள்ள ஆர்பிட் நிறுவனம், 2010-ம் ஆண்டு சிறந்த நிறுவனம் என மத்திய அரசின் தேசிய விருதையும், மத்திய சமூக நீதித் துறையால் சிறந்த சமூக சேவை அமைப்புக்கான விருதையும், 2 முறை தமிழக அரசு விருதையும், 2012-ம் ஆண்டு ஐ.எஸ்.ஓ உலகத் தர நிர்ணய சான்றையும் பெற்றுள்ளது.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.