2014-07-31 16:45:31

திருத்தந்தை மன்னிப்பு வேண்டியதைத் தொடர்ந்து, எவஞ்சலிக்கல் உலக ஒன்றியத்தின் தலைமைச் செயலர் மன்னிப்பு வேண்டல்


ஜூலை,31,2014. எவஞ்சலிக்கல் சபையைச் சார்ந்தவர்களை, கத்தோலிக்கர்கள் சரிவரப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று அச்சபையைச் சார்ந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டதை, எவஞ்சலிக்கல் உலக ஒன்றியத்தின் தலைமைச் செயலர், மதிப்பிற்குரிய முனைவர், Geoff Tunnicliffe அவர்கள் மனமுவந்து பாராட்டினார்.
முனைவர் Tunnicliffe அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்னிப்பு கோரியது, விவிலிய அடிப்படையிலும், கிறிஸ்துவின் நற்செய்தி அடிப்படையிலும் அமைந்திருந்தது என்று கூறினார்.
மேலும், எவஞ்சலிக்கல் சபையைச் சேர்ந்தவர்களும் கத்தோலிக்கர்களைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் நடந்ததற்காக, முனைவர் Tunnicliffe அவர்கள் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தானும், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, கடந்த ஜூன் மாதம் வத்திக்கானில் சந்தித்ததை நினைவுகூர்ந்த எவஞ்சலிக்கல் சபையின் தலைமைச் செயலர் Tunnicliffe அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையுடன் எவஞ்சலிக்கல் சபையின் உறவு ஆழப்பட வேண்டும் என்ற ஆவலை வெளியிட்டார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.