2014-07-30 15:58:10

திருத்தந்தையின் பேட்டி : மகிழ்வான வாழ்வுக்குத் தேவையான 10 அம்சங்கள்


ஜூலை,30,2014. நிதானமாக வாழ்வது, தாராள மனம் கொண்டிருப்பது, அமைதிக்காகப் போராடுவது ஆகிய பண்புகள் மகிழ்வான வாழ்வின் அடிப்படைகள் என்ற கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
அர்ஜென்டீனா நாட்டில் வெளியிடப்படும் Viva என்ற வார இதழுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்த பேட்டியொன்று இஞ்ஞாயிறன்று வெளியானது.
வாழ்வில் ஒருவர் மகிழ்வைக் கொணர்வதற்குத் தேவையான 10 அம்சங்களைக் குறித்து திருத்தந்தை இப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
வாழுங்கள், வாழ விடுங்கள் என்பது திருத்தந்தை குறிப்பிட்டுள்ள முதல் அம்சமாக உள்ளது. "நீங்கள் முன்னேறுங்கள், மற்றவரையும் முன்னேற விடுங்கள்" என்று உரோம் நகரில் பயன்படுத்தப்படும் ஒரு கூற்றை திருத்தந்தை இக்கருத்துடன் இணைத்துக் கூறியுள்ளார்.
மற்றவர்களிடம் தாராள மனதுடன் பழகுதல், வாழ்வில் நிதானமாக சிந்தித்து, செயல்படுதல், தகுந்த முறையில் ஓய்வெடுத்தல் என்ற அம்சங்களையும் திருத்தந்தை தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஓய்வைப் பற்றிக் குறிப்பிடும்போது, ஞாயிறு நாட்கள் ஒய்வு நாள்களாக இருக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இயற்கைக்கு உரிய மதிப்பை அளிக்காமல் இருப்பது, மனிதகுலம் தன்னைத் தானே தற்கொலை செய்துகொள்வதற்கு இணையாகும் என்று கூறியுள்ள திருத்தந்தை, சுற்றுச்சூழலைப் பேணுவது நமது இன்றைய முக்கியத் தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
பிற மதத்தவர் மீது மதிப்பு காட்டுவதும், பிறரை வற்புறுத்தி மதமாற்றம் செய்யாமல் இருப்பதும் மகிழ்வான வாழ்வுக்கு வழிகள் என்பதையும் திருத்தந்தை இப்பேட்டியில் எடுத்துரைத்துள்ளார்.
எதிர்கால வாய்ப்புக்கள் இன்றி தவிக்கும் இளையோர், போதைப் பொருள்களையும், தற்கொலை முயற்சிகளையும் தேடுகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, தங்களைத் தாங்களே மதிக்கக்கூடிய வகையில் இளையோருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரவேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
பேட்டியின் ஒரு பகுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் சிறுவனாய் இருந்தபோது, தங்கள் இல்லத்தில் பணிகள் செய்த ஒரு பெண், தனக்கு வேலையின் மாண்பினைச் சொல்லித் தந்தார் என்பதைக் குறிப்பிட்டு, இல்லங்களில் பணியாற்றுவோரை மதிப்புடன் நடத்துவது பற்றியும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.