2014-07-30 15:01:58

அமைதி ஆர்வலர்கள் : 1945ல் நொபெல் அமைதி விருது பெற்ற Cordell Hull


ஜூலை,30,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்களுள் 36வது மாநிலமாகவும், மக்கள்தொகையை அதிகமாகக் கொண்ட மாநிலங்களுள் 17வதாகவும் அமைந்திருப்பது Tennessee மாநிலம். இம்மாநிலத்தின் Pickett மாவட்டத்தில் 1871ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்தவர் Cordell Hull. இவரது தந்தை வில்லியம் ஒரு சாதாரண விவசாயி. பின்னாளில் இவர் மர வியாபாரமும் செய்தார். இவருக்கு ஐந்து மகன்கள். இவர்களில் மூன்றாவது மகனாகிய Cordell Hull மட்டுமே படிப்பில் ஆர்வம் காட்டினார், அதுவும் வழக்கறிஞராக விரும்பினார். Cordell Hull தனது ஆரம்பப் பள்ளியை ஓர் அறையுள்ள பள்ளியில் படித்தார். இந்த அறையை இவரது தந்தையே கட்டிக்கொடுத்தார். பின்னர் ஏறத்தாழ மூன்றாண்டுகள் சாதாரண பள்ளியில் பயின்ற பின்னர் Ohioவிலுள்ள லெபனன் நகரின் தேசிய நார்மல் பல்கலைக்கழத்தில் கல்வி கற்றார் Cordell Hull. 1891ம் ஆண்டில் சட்டக்கல்வியில் பட்டம் பெற்ற இவர், இருபது வயதை எட்டும் முன்னரே செலினாவில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். இவர் மாணவராக இருந்தபோதே அரசியல் கூட்டங்களில் பங்கு பெற்றதால், தக்க வயது வந்தவுடன் Tennessee மாநிலத்தின் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டார். 1893ம் ஆண்டு முதல் 1897ம் ஆண்டு வரை அம்மாநிலத்தின் சட்ட சபையில் உறுப்பினராக இருந்தார். பின்னர், இஸ்பானிய-அமெரிக்கப் போரில் நான்காவது Tennessee இராணுவப் பிரிவில் தலைவராகப் பணியாற்றுவதற்காக அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தார்.
பின்னர், Tennessee மாநிலத்தின் Gainsboroவில் மீண்டும் வழக்கறிஞர் தொழிலைப் பயிற்சி செய்யத் தொடங்கிய Hull, 1903ம் ஆண்டில் மாவட்ட 5வது நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1907ம் ஆண்டுவரை இப்பதவியில் இருந்த இவரை, இவரது மனைவி Rose Frances Whitney உட்பட எல்லாரும், நீதிபதி என்றே அழைத்தனர். இவர், 1907ம் ஆண்டில் Tennessee மாநில அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்பணியில் 1931ம் ஆண்டுவரை இருந்தார். இப்பணிக் காலத்தில் அவர் ஆற்றிய பணி குறிப்பிடும்படியானது. குறைந்த வரி அமைப்பு இயக்கத்தின் தலைவராகவும், மத்திய வருமானவரி மசோதாவை முதலில் எழுதியவராகவும்(1913), மத்திய மற்றும் மாநில மரபுரிமை வரிச் சட்டத்தை திருத்தி அமைத்தவராகவும்(1916), முதல் உலகப்போர் முடிவில் உலக வணிக ஒப்பந்தத் தொகுப்பை எழுதியவராகவும், இப்படி பல சிறப்பான பணிகளைச் செய்தார். இதனால், இவர், குறைந்த காலத்திலேயே, வணிக மற்றும் நிதிக் கொள்கைகளில் நிபுணர் என்ற பெயரையும் பெற்றார். Hull, 1931ம் ஆண்டு முதல் 1937ம் ஆண்டு வரை அமெரிக்க ஐக்கிய நாட்டு செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயினும், 1933ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி அரசுத்தலைவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் இவரை அமெரிக்க அரசுச் செயலராக நியமனம் செய்ததால் செனட்டர் பதவியை விட்டு விலகினார். 1944ம் ஆண்டில் உடல்நிலை காரணமாக அரசுச் செயலர் பதவியை விட்டு விலகும்வரை ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகள் இப்பணியில் இருந்தார். அமெரிக்க வரலாற்றில் அரசுச் செயலர் பதவியை நீண்டகாலம் வகித்த பெருமையும் Cordell Hull அவர்களுக்கு உள்ளது.
Cordell Hull அவர்களின் இந்த அரசுச் செயலர் பணியின் ஆரம்பம் சாதகமானதாக அமையவில்லை. 1933ம் ஆண்டில் இலண்டனில் நடந்த நிதி மற்றும் பொருளாதார கருத்தரங்கில் இவர் தலைமையில் அமெரிக்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அமெரிக்கா உலகில் வளமையான நாடாக இருந்தபோதிலும், இக்கருத்தரங்கு அமெரிக்காவுக்குத் தோல்வியாக அமைந்தது. ஆயினும் தோல்வியின் காலடியில் வெற்றியும் இவருக்கு வந்தது. அதே ஆண்டு நவம்பரில் Montevideoவில் நடந்த அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பின் 7வது கருத்தரங்கில், Cordell Hull தலைமையில் அமெரிக்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அக்கருத்தரங்கில் இலத்தீன் அமெரிக்க அரசியல் வல்லுனர்களின் நம்பிக்கையை இவர் பெற்றார். இதனால் 21 அமெரிக்க நாடுகள் மத்தியில் நல்ல கொள்கையுடைய பக்கத்து நாட்டவர் என்ற நற்பெயருக்கும் அடித்தளமிட்டார். இக்கருத்தரங்கைத் தொடர்ந்து, அமெரிக்க நாடுகளுக்கிடையே அமைதியை நிலைநாட்டும் கருத்தரங்கு ஒன்று 1936ம் ஆண்டில் புவனோஸ் அய்ரெஸிலும், 1938ம் ஆண்டில் அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பின் 8வது கருத்தரங்கு லீமா நகரிலும், 1940ம் ஆண்டில் அமெரிக்கக் குடியரசுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் 2வது கூட்டம் ஹவானா நகரிலும் நடந்தன. அதேநேரம், 1934ம் ஆண்டின் வணிக ஒப்பந்தங்கள் வழியாக இவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏற்றுமதி இறக்குமதி வரிகளைக் குறைப்பதற்கான சட்டவிதிகள், வணிகத்தை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றை எண்ணற்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்தார்.
உலகின் பிற பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் முனைந்து செயல்பட்டார் Hull. 1936ம் ஆண்டிலிருந்து உலகில் சர்வாதிகாரிகள் அதிகரித்து வந்தது அமைதிக்கு ஆபத்தாக இருப்பதை இவர் கண்டார். இதனால் இவர் ஆயுதக்களைவுக்கும், ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பை அமல்படுத்துவதற்கும் அழைப்புவிடுத்து மேற்க்த்திய சனநாயக அமைப்புகளுக்கு ஆதரவளித்தார். இந்தோ சீனாவுக்குள் ஜப்பானின் அத்துமீறல் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் Pearl துறைமுக கடற்படைத் தளத்தை ஜப்பான் தாக்குவதற்கு முன்னேறி வந்தபோது, அமெரிக்கா மேற்கொள்ளப்போகும் எதிர்தாக்குதல்கள் குறித்து எச்சரித்தார். ஹவாய்த் தீவிலுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு Pearl துறைமுக கடற்படைத் தளம், 1941ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி காலையில் (ஜப்பானுக்கு 8ம் தேதி) தாக்கப்பட்டது. பசிபிக் பகுதியில் ஜப்பான் பேரரசுக்கு எதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டுச் செயல்பாடுகளைத் தடுப்பதற்கே இத்தாக்குதலை ஜப்பான் நடத்தியது. ஆனால் இத்தாக்குதல் அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு, இதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடு இரண்டாம் உலகப் போரில் தன்னையும் இணைப்பதற்கு காரணமானது.
Hull அவர்கள், நேசநாடுகள் கொள்கைகளை வகுத்த சில கருத்தரங்குகளில் கலந்துகொண்டாலும், இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டங்களில் உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கும், போதுமான சட்ட, பொருளாதார, மற்றும் இராணுவ பலத்துடன் செயல்படுவதற்கும் தன்னை அர்ப்பணிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை உருவாக்குவதற்கு இவர் பெரும் முயற்சி எடுத்தார். தனது உடல்நிலை காரணமாக, 1944ம் ஆண்டில் அமெரிக்க அரசுச் செயலர் பதவியைத் துறந்தாலும், 1944ம் ஆண்டில் சான் பிரான்செஸ்கோவில் நடந்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கருத்தரங்குக்கு அமெரிக்கப் பிரதிநிதி குழுவின் உறுப்பினராகவும், மூத்த ஆலோசகராகவும் இவர் பணி செய்தார்.
Hull அவர்கள் பேச்சுத் திறமையைக் கொண்டிருக்கவில்லை. எடுப்பான தோற்றமும் இவரிடம் கிடையாது. முன் இருக்கைகளில் அமரும் அளவுக்குச் சாதுரியத்தைக் கொண்டிருக்கும் அரசியல்வாதி போன்ற திறமை படைத்தவரும் அல்லர் இவர். ஒல்லியான, உயரமான தோற்றமுடைய Hull, கொஞ்சம் கூச்ச குணமுடையவர். ஆனால், எண்ணத்திலும் செயலிலும் நேர்மையானவர். இவரிடம் அணுகிச் செல்பவர்கள், நீதி, அமைதி குறித்த இவரின் சரியான அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளால் ஈர்க்கப்படாமல் இருக்கமாட்டார்கள். இக்கொள்கைகளை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருந்தவர். தனது கொள்கைகளுக்கு சோர்வின்றி நடைமுறை விளக்கங்கள் கொடுத்து மற்றவரைப் புரிய வைப்பவர். ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாவதற்கு Cordell Hull அவர்கள் எடுத்த பெரும் முயற்சியைப் பாராட்டும் விதமாக, 1945ம் ஆண்டில் இவருக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் அவர்கள், Cordell Hullஐ "ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தந்தை" எனப் பாராட்டினார். Cordell Hull அவர்கள் 1955ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி காலமானார்.
“அமைதியான மனமே உங்களின் முக்கியமான மூலதனம், அதுவே எல்லா வெற்றிகளும் கொண்டுவரும். கோழைகள் எப்போதும் வெற்றி அடையமுடியாது. உண்மைக்காக எதுவும் தியாகம் செய்யலாம், ஆனால் உண்மையை எதற்காகவும் தியாக செய்ய முடியாது. நீ உன்னை பலவீனன் என்று என்றும் சொல்லாதே, எழுந்து நில் தைரியமாக இரு. உடலிலும், மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது. காயம்படாதவன்தான் தழும்பை பார்த்து நகைப்பான்” என்ற விவேகானந்தரின் பொன் மொழிகளைச் சிந்திப்போம். உலகிலும் உள்ளங்களிலும் அமைதி நிலைபெற விழைவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.