2014-07-29 15:30:17

விவிலியத்
தேடல் கொடிய குத்தகைக்காரர் உவமை பகுதி - 1


RealAudioMP3 மனித வரலாற்றின் பல பக்கங்கள் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். அவற்றில் ஒரு பக்கத்தை ஜூலை 28, இத்திங்களன்று நாம் மீண்டும் புரட்டிப் பார்த்தோம். ஆம், சரியாக 100 ஆண்டுகளுக்கு முன், 1914ம் ஆண்டு, ஜூலை 28ம் தேதி, முதல் உலகப் போர் என்றழைக்கப்படும் ஐரோப்பியப் போர் ஆரம்பமானது.
அதுவரை நடந்த போர்களில், வாள், வேல், அம்புகள், பீரங்கிக் குண்டுகள் போன்ற அழிவுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், போர்க்களம் என்ற ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீரர்கள் மோதியதால், அப்பகுதிகளில் மட்டுமே உயிர் பலிகளும், அழிவுகளும் ஏற்பட்டன. மக்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும்பாலும் தாக்கப்படுவதில்லை.
ஆனால், முதல் உலகப்போரின்போது, இந்த வரைமுறைகள் மீறப்பட்டன. அதிக சக்தி மிகுந்த கொலைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாலும், தரைவழி, கடல்வழி மட்டுமல்லாமல், வான்வழி தாக்குதல்கள் நிகழ்ந்ததாலும், அப்பாவி பொதுமக்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர் என்பது அதிர்ச்சி தரும் அநீதி.

போர்களால் உருவாகும் அநீதிகளை எண்ணிப்பார்க்க இன்றைய விவிலியத் தேடல் நம்மை அழைத்து வந்துள்ளது. லூக்கா நற்செய்தியின் 20ம் பிரிவில் கூறப்பட்டுள்ள ‘கொடிய குத்தகைக்காரர் உவமை’யில் இன்று நாம் தேடலைத் துவக்குகிறோம். முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவையொட்டி இவ்வுவமையை நாம் துவக்குவது பொருத்தமாக, பொருளுள்ளதாகத் தெரிகிறது.

முதல் உலகப் போரிலும், இன்னும் இவ்வுலகில் தொடரும் போர்களிலும் ஈடுபட்டு வரும் மனிதர்களைப் பற்றி இவ்வுவமையின் முதல் இரு இறைச் சொற்றொடர்கள் உருவகமாகச் சொல்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதோ உவமையின் அறிமுக வரிகள்:
லூக்கா 20: 9-10
பின்பு இயேசு மக்களை நோக்கி இந்த உவமையைச் சொல்லத் தொடங்கினார்: ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு நீண்ட காலம் நெடும் பயணம் மேற்கொண்டார். பருவகாலம் வந்ததும் ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள்.

திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர், நல்லதொரு தோட்டத்தை வளர்த்து, அதை மற்றவர்களிடம் குத்தகைக்கு விட்டுச்சென்றார். குத்தகைக்குப் பெற்றவர்களோ, அத்தோட்டம் அவர்களுக்கே சொந்தம் என்பதுபோல் நடந்துகொண்டனர். அதற்கும் மேலாக, தங்களுக்குச் சொந்தமில்லாததை உரிமையாக்கிக்கொள்ள, அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தினர் என்பதை இவ்வுவமை விவரிக்கிறது.
இவ்வுலகம் என்ற திராட்சைத் தோட்டத்தை இறைவன் கண்ணும் கருத்துமாக உருவாக்கி, மனிதர்களாகிய நம்மிடம் குத்தகைக்கு ஒப்படைத்துள்ளார். ஆனால், நம்மில் சிலர், நமக்கு உரிமையில்லாததை வளைத்துப் போட்டுக்கொள்ளும் பேராசை கொள்வதனால், பிரச்சனைகள் எழுகின்றன. இப்பிரச்சனைகளில் வன்முறையும் சேரும்போது, போர்களாக உருவாகின்றன. முதல் உலகப் போரின் முதல் நூற்றாண்டு நாளை நினைவுகூரும் இவ்வேளையில், நாம் இவ்வுலகில் வெறும் குத்தகைக்காரர்கள் என்ற கருத்தை மீண்டும் ஒரு முறை உள்ளத்தில் பதிக்க முயல்வோம்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக, இஸ்ரேல் பாலஸ்தீன அரசுகளிடையே நிகழ்ந்துவரும் வெறித்தனமான போரைப்பற்றி பலமுறை சிந்தித்து வந்துள்ளோம். போர்க்களமாக மாறியுள்ள காசா பகுதி, தற்போது அங்கு வாழ்வோரிடம் 'குத்தகைக்கு' கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்நிலப் பகுதியைப் பாதுகாத்து, அடுத்தத் தலைமுறையிடம் அதை ஒப்படைத்துவிட்டுச் செல்லவேண்டும். ஆனால், அங்கு நடப்பதென்ன? தற்போது, அங்கு முடிவுகள் எடுக்கும் சக்தி படைத்தத் தலைவர்கள், தாங்கள் குத்தகைக்காரர்கள் என்பதை முற்றிலும் மறந்துவிட்டு, அப்பகுதியின் அடுத்த குத்தகைக்காரர்களான இளம் தலைமுறையினரையும், குழந்தைகளையும் தங்கள் வன்முறையால் அழித்து வருகின்றனர்.

போர்களின் தாக்கம் போர்கள் நிகழும் காலத்தையும் தாண்டி மேலும் பல ஆண்டுகள் நீடிக்கின்றன என்பது மற்றொரு வேதனையான, அநீதியான உண்மை. போர்க்காலங்களில் அழிவுக் கருவிகள் கொண்டு மக்களையும், மண்ணையும் பாழாக்குகிறோம். போர் முடிந்தபின்னரும் அந்நாடுகளில் நிலத்தடி கண்ணி வெடிகளைப் புதைத்து, மக்களைத் தொடர்ந்து அழித்து வருகிறோம். கம்போடியாவில் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தது, கம்யூனிசக் கொள்கைகளைக் கொண்டிருந்த Khmer Rouge என்ற அமைப்பு. இவ்வமைப்பைச் சேர்ந்த படைத்தளபதி ஒருவர் நிலத்தடி வெடிகளைப் பற்றி பெருமையாகக் கூறிய வார்த்தைகள் இவை:
"நிலத்தடி வெடி, சிறந்ததொரு போர்வீரனைப் போன்றது. எந்நேரமும் உறங்காமல், தவறாமல், துணிவுடன் பணியாற்றும் போர்வீரர் அது" என்று அத்தளபதி சொன்ன வார்த்தைகளைக் கேட்கும்போது, சிந்திக்கும் திறனையே இழந்துவிட்ட இத்தகைய மனிதர்களும் இருக்கிறார்களே என்று நம் மனம் பதைபதைக்கிறது.

64 நாடுகளில், 11 கோடிக்கும் மேலான நிலத்தடி வெடிகள் இன்றும் ஆபத்தை உருவாக்கும் நிலையில் புதைந்துள்ளன என்று ஐ.நா.வின் UNICEF அமைப்பு கூறியுள்ளது. 1975ம் ஆண்டிலிருந்து 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் நிலத்தடி வெடிகளால் ஊனமுற்றுள்ளனர். இன்னும் பல இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலர் சிறுவர், சிறுமியர். சிறுவர், சிறுமியர் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்ற கேள்விக்கு விடைதேடும்போது, மற்றொரு வேதனையான உண்மை வெளியாகிறது. அமெரிக்க ஐக்கிய நாடு, மேற்கொண்ட போர்களில் ‘Cluster Bomb’ என்ற முறையைப் பயன்படுத்தினர். இம்முறையில், பல வண்ணங்களில் சிறு, சிறு பந்துகள் போன்ற குண்டுகள் கொத்தாக வீசப்பட்டன. இவற்றில் பல வெடித்து, பேரழிவுகளை உருவாக்கின. இன்னும் பல்லாயிரம் சிறு பந்துகள் போன்ற வெடிகள், வெடிக்காமல் வயல்வெளிகளில் விட்டுச் செல்லப்பட்டன. இவை கண்ணைக் கவரும் வண்ணத்தில் அமைந்திருந்ததால், இவற்றை விளையாட்டுப் பொருள்கள் என்று எண்ணி, கையில் எடுத்த சிறுவர் சிறுமிகள் கொலையுண்டனர், அல்லது, உடல் உறுப்புக்களை இழந்தனர்.
தங்களுக்கு உரிமையில்லாத வேற்று நாடுகளில் போர் தொடுப்பதே அநீதி எனும்போது, அந்நாடுகளில் தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில், நிலத்தடி கண்ணிவெடிகளைப் புதைத்துச் செல்வது அரக்கத்தனத்தின் உச்சம். இத்தகைய அரக்கத்தனத்தை போரின் ஓர் அங்கமாக மாற்றிய அவமானச் செயலின் பெரும் பங்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேரும்.

மதம், நிலம், இனம் என்ற பல்வேறு காரணங்களுக்காக நாம் மேற்கொண்ட அனைத்து போர்களிலும் வெற்றி, தோல்வி என்ற வார்த்தைகளை வரலாற்றில் எழுதியுள்ளோம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், போரில் யாரும் எதையும் வென்றதில்லை. இனியும் வெல்லப்போவதில்லை. இந்த கருத்துக்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று தன் நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்:
“முதல் உலகப்போரை, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், 'மதியற்ற மனிதவேட்டை' என்று குறிப்பிட்டார். நான்கு ஆண்டுகள் நடந்த இப்போரின் இறுதியில் நிலவிய அமைதி, மிக எளிதில் உடைந்துவிடும் நிலையில் இருந்தது. நாம் முதல் உலகப்போரை நினைவுகூரும்போது, நமது இறந்தகாலத் தவறுகள் மீண்டும் இழைக்கப்படக் கூடாது என்று நம்புவோம். பொறுமையோடும், உரையாடலை மேற்கொள்ளும் துணிவோடும் அமைதியை நிலைநாட்டும் பாடங்களைப் பயில்வோம்.
என் எண்ணங்கள், மத்தியக் கிழக்குப் பகுதி, ஈராக், உக்ரைன் ஆகிய நாடுகளை வலம் வருகின்றன. அங்குள்ள மக்களும், தலைவர்களும் அமைதியையும், ஒப்புரவையும் வளர்க்கும் உரையாடல் முயற்சிகளில் உறுதியான மனதுடன் ஈடுபடவேண்டும் என்று என்னோடு இணைந்து செபியுங்கள். தனி மனிதர்களின் சுயநலத் தேவைகளைவிட, பொது நலனில் அக்கறை காட்டும் முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்று செபியுங்கள். போரினால் நாம் அனைத்தையும் இழக்கிறோம். அமைதியால் நாம் இழப்பது ஒன்றுமில்லை.
போர் வேண்டாம்! இனி போர் ஒருபோதும் வேண்டாம்! சீரான எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கையை இழந்துள்ள குழந்தைகளை எண்ணிப் பார்க்கிறேன். இறந்துபோன, காயப்பட்ட, ஊனமுற்ற, அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை எண்ணிப் பார்க்கிறேன்.
தயவுசெய்து நிறுத்துங்கள்! என் முழு மனதுடன் மன்றாடுகிறேன், சண்டையை தயவுசெய்து நிறுத்துங்கள்!”

இறைவன் படைத்து, நம் பொறுப்பில் ஒப்படைத்துள்ள இவ்வுலகை, போரினால் எவ்வளவு தூரம் சிதைத்துள்ளோம் என்ற எண்ணம், நாம் அடுத்த சில வாரங்கள் சிந்திக்கப்போகும் 'கொடிய குத்தகைக்காரர் உவமை'க்கு தகுந்ததொரு முன்னுரையாக அமைந்துவிட்டது.
இதுவரை, இவ்வுலகைப் பற்றியும், மனித குலத்தைப் பற்றியும் வருத்தமான, கசப்பான எண்ணங்களை உள்ளத்தில் பதித்தோம். ஆயினும், நாம் அவ்வப்போது கூறிவருவதுபோல் "இவ்வுலகம் அவ்வளவு மோசமில்லை" என்பதை நமக்கு மீண்டும் நினைவுறுத்தும் ஒரு மருத்துவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விழைகிறேன். Izzeldin Abuelaish என்ற இம்மருத்துவர் காசாப் பகுதியில் அமைத்துள்ள Jabalia என்ற முகாமில் வளர்ந்தவர். மருத்துவர் Abuelaish எழுதிய “I Shall Not Hate: A Gaza Doctor’s Journey” அதாவது, "நான் வெறுப்பு கொள்ளமாட்டேன்: காசாப் பகுதி மருத்துவரின் பயணம்" என்ற நூல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் பயணம் மேற்கொண்ட வேளையில், அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.
மருத்துவர் Abuelaish அவர்கள் அண்மையில் வத்திக்கான் வானொலியில் ஒரு பேட்டியும் அளித்துள்ளார். இந்தப் பேட்டியிலும், இவர் எழுதிய நூலிலும் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை நாம் அடுத்தவாரத் தேடலில் சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.