2014-07-29 15:56:24

முரண்பாடுகளைக் களைந்து புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு லெபனன் மதத் தலைவர்கள் வலியுறுத்தல்


ஜூலை,29,2014. லெபனன் குடியரசின் அரசியல்வாதிகள் முரண்பாடுகளைக் களைந்து புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு அந்நாட்டு மாரனைட் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை Beshara Rai, அந்நாட்டின் இஸ்லாமிய மதத் தலைவர் Mohammed Rashid Qabbani ஆகிய இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
லெபனனில் கடந்த மே 25ம் தேதியிலிருந்து அரசுத்தலைவர் இடம் காலியாக இருப்பதைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய முதுபெரும் தந்தை Beshara Rai அவர்கள், லெபனன் நாடாளுமன்றம் புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு 9 தடவைகள் கூடியும் அனைத்துக் கூட்டங்களும் வீணாக நடந்துள்ளன எனக் குறை கூறினார்.
திமான் நகரில் திருப்பலி நிறைவேற்றியபோது புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொண்ட முதுபெரும் தந்தை Beshara Rai, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் அரசியல் அமைப்பைக் கடுமையாய் மீறுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.
ரம்ஜான் விழாவை முன்னிட்டு பெய்ரூட் மசூதியில் மறையுரையாற்றிய Mohammed Rashid Qabbani அவர்களும், லெபனன் அரசியல்வாதிகள், எல்லாவற்றிலும் பிடிவாதமாகவும், வகுப்புவாத போக்கிலும் செயல்படுகின்றனர் எனக் குறை கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.