2014-07-29 15:30:11

புனிதரும் மனிதரே - பேரரசர் அக்பர் அரண்மனையில்...


இத்தாலியில் செல்வம் மிகுந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர் ருடால்ப் (Rudolph). இவரது தாய், வறியோருக்கு உணவளிப்பதிலும், மருத்துவமனை சென்று நோயுற்றோரை சந்திப்பதிலும் அதிக அக்கறை கொண்டவர். அன்னையிடம் விளங்கிய பரிவுள்ளம் ருடால்ப்பிடமும் வெளிப்பட்டது. ஒரு சில நேரங்களில் இவர், தான் அணிந்திருந்த உடைகளைக் கழற்றி வறியோருக்கு வழங்கியதாகச் சொல்லப்படுகிறது.
தன் 18வது வயதில் இயேசு சபையில் சேர்ந்த ருடால்ப், 28வது வயதில் அருள் பணியாளராகத் திருநிலைப் பெற்றதும், இந்தியாவில், கோவா பகுதியில் தன் மறைப்பணியைத் துவக்கினார்.
அவ்வேளையில், இந்தியாவில், பேரரசர் அக்பர், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களிடையே அறிவுசார்ந்த உரையாடலை வளர்க்க விரும்பி, அப்பணிக்கு இயேசு சபை அருள் பணியாளர்கள் தேவை என்ற விண்ணப்பத்தை கோவாவில் இருந்த இயேசு சபைத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இந்த விண்ணப்பத்தைக் கண்ட இயேசு சபைத் தலைவர், அருள் பணியாளர் ருடால்ப் அக்வவீவா (Rudolph Acquaviva) அவர்களையும், வேறு இரு இயேசு சபைத் துறவிகளையும் அக்பரிடம் அனுப்பி வைத்தார். பேரரசர் அக்பர் அரண்மனையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியபின், அருள் பணியாளர் ருடால்ப் அவர்கள் மீண்டும் கோவா திரும்பினார்.
சால்செட் (Salsette) என்ற பகுதியில் இருந்த 66 கிராமங்களில் தங்கள் மறைபரப்புப் பணியை முழு வீச்சில் துவங்க இயேசு சபையினர் தீர்மானித்தனர். அப்பகுதியில், போர்த்துகீசியர்கள் சிலர், அம்மக்களின் மத உணர்வுகளை மதிக்காமல் மேற்கொண்ட செயல்களால் மக்கள் வெறுப்படைந்திருந்தனர். இதனால், கிறிஸ்தவ மறையின் மீதும் கோபம் கொண்டிருந்தனர்.
1583ம் ஆண்டு, ஜூலை மாத இறுதியில் அருள் பணியாளர் ருடால்ப் அக்வவீவா அவர்கள், நான்கு இயேசு சபைத் துறவியரோடு Cuncolim என்ற கிராமத்தை அடைந்தபோது, அக்கிராமம் ஏற்கனவே ஒரு பிரச்சனையால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இதை சரிவர அறியாத இயேசு சபையினர், அக்கிராமத்தின் எல்லையில் ஒரு கோவிலை எழுப்பும் எண்ணத்தோடு, கிராமத்திற்கு வெளியே ஓரிடத்தில் சிலுவை ஒன்றை நட்டனர். இதைக் கண்ட ஒரு சிலர், ஊர்மக்களைத் திரட்டி வந்தனர். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த கிராம மக்களில் சிலர் ஆயுதங்களுடன் வந்து, அங்கிருந்த ஐந்து இயேசு சபை துறவிகளையும் வெட்டிக் கொன்றனர்.
அருள் பணியாளர் ருடால்ப் அக்வவீவா (Rudolph Acquaviva) அவர்களையும், அவருடன் கொல்லப்பட்ட நான்கு இயேசு சபைத் துறவிகளையும் திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், 1893ம் ஆண்டு முத்திப்பேறு பெற்றவர்களென அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.