2014-07-29 15:55:45

கடந்த காலத்தில் கத்தோலிக்கரால் பெந்தகோஸ்து சபையினர் துன்புறுத்தப்பட்டதற்கு திருத்தந்தை மன்னிப்பு


ஜூலை,29,2014. இத்தாலியின் கடந்த காலப் பாசிசக் கொள்கைகளின்கீழ் சில கத்தோலிக்கர்கள் பெந்தகோஸ்து சபையினரைத் துன்புறுத்தியதற்காக, கத்தோலிக்கரின் மேய்ப்பர் என்ற முறையில் மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் இத்தாலியின் கம்ப்பானியா மாநிலத்தின் கசெர்த்தா நகருக்கு இத்திங்களன்று தனது தனிப்பட்ட பயணமாகச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகரின் பெந்தகோஸ்து சபை ஆலயத்தில் ஏறக்குறைய 200 பேரைச் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.
மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய தலைப்புக்களில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் எல்லாரும் பாவிகள், எனினும், நம் ஆண்டவரின் பிரசன்னத்தில் நாம் அனைவரும் துணிச்சலுடன் தொடர்ந்து செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலை மேற்கோள்காட்டி, கிறிஸ்துவின் உடலின் பன்மைத்தன்மைப் பற்றியும் பேசிய திருத்தந்தை, தூய ஆவியின் செயல்வழியாக, இந்தப் பன்மைத்தன்மை ஒன்றிப்புக்கு வழி அமைக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றுப் பேசிய அவரின் நண்பரான கசெர்த்தா பெந்தகோஸ்து சபை பாஸ்டர் Giovanni Traettino அவர்கள், இப்பயணம் நினைத்துப்பார்க்க முடியாத, எதிர்பாராத கொடை என்று கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்பயணத்துக்கு நன்றி தெரிவித்தார்.
தங்களது பெந்தகோஸ்து சபையினர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபிப்பதாகவும் Traettino அவர்கள் கூறினார். திருத்தந்தையும் தனக்காகத் தொடர்ந்து செபிக்குமாறு அச்சபையினரிடம் கேட்டுக்கொண்டார்.
கடந்த சனிக்கிழமை பிற்பகலில் கசெர்த்தோ சென்று 2 இலட்சத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கருக்குத் திருத்தந்தை திருப்பலி நிகழ்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.