2014-07-28 16:19:09

வாரம் ஓர் அலசல் – கடந்தகாலத் தவறுகள் நிகழ்காலப் பாடமாகட்டும்


ஜூலை,28,2014 RealAudioMP3 . அது 1915ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி. அன்று பிரான்சின் St.Julien பகுதிமீது ஜெர்மன் படைகள் குண்டுகளை வீசின. இந்தக் குண்டுவீச்சு மழைக்குப் பின்னர், குண்டுகள் துளைத்த குழிகளுக்கு அருகில் சென்று பார்த்தார் Jack Dorgan. இவர் இங்கிலாந்தின் வடகிழக்கிலிருந்த Northumberland காலாட்படையின் 7வது பிரிவின் தலைவர். Jack அங்குச் சென்று பார்த்தபோது மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. பல படைவீரர்களின் தொடை எலும்புகளை மட்டுமே அவர் கண்டார். இது பற்றி விவரித்துள்ள Jack Dorgan,
படைவீரர்கள் கால்களின் மீதிப் பகுதியை என்னால் காணமுடியவில்லை. அவ்விடத்தில் காயமடைந்து கிடந்த வீரர்களில் ஒருவரான Bob Young என்பவர் மட்டும் உயிருடன் கிடப்பதைக் கண்டேன். நான் அவர் அருகில் சென்று, நான் ஏதாவது உங்களுக்குச் செய்ய வேண்டுமா எனக் கேட்டேன். Bob என்னிடம், எனது கால்களை நீட்டிவிடுங்கள் Jack என்று சொன்னார். ஆனால் அப்போது அவரது கால்கள் துண்டு துண்டாகி எங்கோ சிதறிக் கிடந்தன. அது அவருக்குத் தெரியாது. எனவே நான் அவரது எலும்புகளைத் தொட்டேன். அதுவே Bobக்குத் திருப்தியாக இருந்தது. பின்னர் Bob என்னிடம், எனது சட்டைப் பையிலிருந்து எனது மனைவியின் புகைப்படத்தை வெளியே எடுங்கள் என்றார். நானும் அதை எடுத்து அவரது கையில் வைத்தேன். அவரால் அவரது கையைத் தூக்க முடியாது, விரலை அசைக்கவும் முடியாது. ஆயினும் எப்படியோ கஷ்டப்பட்டு தனது மனைவியின் புகைப்படத்தை தனது நெஞ்சின்மீது வைத்தார். அந்நிலையிலே Bobன் உயிரும் பிரிந்தது.
அன்பு நெஞ்சங்களே, முதல் உலகப்போர் நடந்தபோது இப்படி உயிரிழந்தவர்தான் படைவீரர் Bob Young. இப்படிப் போர்களில் உயிரிழந்த படைவீரர்களின் கடைசி நிமிடங்களை பல அருங்காட்சியங்கள் இன்றும் வருங்காலத் தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. முதல் உலகப்போரில் Bob Young போன்ற தொன்னூறு இலட்சத்துக்கு மேற்பட்ட படைவீரர்கள் இறந்தனர். இந்தப் போரில் மட்டுமல்ல, அதற்கு இருபது ஆண்டுகள் கழித்து நடந்த இரண்டாம் உலகப்போர், தொடர்ந்து உலகில் நடந்த, தற்போது நடந்துகொண்டிருக்கும் போர்களிலும் இலட்சக்கணக்கான Bob Youngகள் இறந்தனர், இறந்துகொண்டிருக்கின்றனர். இலங்கை இனப்படுகொலைகள் பற்றி விவரிக்கவே வேண்டியதில்லை. கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக புனிதபூமியின் காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே நடந்துவரும் கடும் போரில் தினமும் பல Bob Youngகளும், அப்பாவி மக்களும் செத்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட 12 மணிநேரப் போர் நிறுத்தத்துக்குப் பின்னர் இஞ்ஞாயிறன்று மீண்டும் கடும் மோதல்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து காசாவில் உடனடியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் போர் நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது ஐ.நா.பாதுகாப்பு அவை. இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டும் போர் நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளது ஐ.நா.பாதுகாப்பு அவை. இத்திங்கள் பகல் செய்திப்படி, காசாவில் ராக்கெட்டுகளின் சப்தம் குறைந்திருப்பதாக ஊடகங்கள் கூறியுள்ளன. சீனாவும் இந்திய எல்லையில் ஊடுருவல் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் உக்ரேய்னிலும் சண்டை முடியவில்லை.
கடந்த சில நாள்களாக நமது நிகழ்ச்சிகளில் போர்களைப் பற்றியும், அமைதி பற்றியும் தொடர்ந்து பேசி வருகிறோம். இத்திங்களன்று வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியிலும் இதே கருத்துக்கள் தொடருகின்றன. காரணம், 2014, ஜூலை 28 இத்திங்கள், முதல் உலகப் போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டை நாடுகள் நினைவுகூருகின்றன. மேலும், நாடுகளும் கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. 1914ம் ஆண்டு ஜூலை 28ம் தேதியன்று, ஆஸ்திரிய நாட்டு வாரிசு இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்றபோது, போஸ்னியக் குடியரசின் சரயேயோவில் Gavrilo Princip என்ற செர்பிய மாணவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனவே ஆஸ்திரியா, உடனடியாக செர்பியா மீது படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய பேரரசுகளின் எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே இந்தப் போர் உலகம் முழுவதற்கும் பரவியது. 1914ம் ஆண்டு ஆகஸ்டில் ஜப்பானும், 1915ம் ஆண்டு ஏப்ரலில் இத்தாலியும், 1917ம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்க ஐக்கிய நாடும் இப்போரில் இணைந்தன.
1914ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி தொடங்கி 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி வரை இப்போர் நடந்தது. வரலாற்றில் நடந்த மிகப்பெரிய போர்களில் ஒன்றாக இந்த முதல் உலகப்போர் கணிக்கப்படுகின்றது. இரண்டாம் உலகப் போர் தொடங்கும்வரை, இப்போர், உலகப் போர் அல்லது பெரிய போர் என்றே அழைக்கப்பட்டது. முதல் உலகப் போர் என இது அழைக்கப்பட்டாலும், இப்போர் பெரும்பாலும் ஐரோப்பாவிலே நடந்தது. இப்போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், இரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும், மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி இத்தாலி ஆகிய நாடுகளும் எதிரணிகளாக நின்று போரிட்டன. இப்போரில் ஆறு கோடி ஐரோப்பியர்கள் உட்பட ஏழு கோடிக்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இப்போரினால் ஏற்பட்ட ஆக்ரமிப்புகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் போன்றவை மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின. இப்போரின் முடிவில் ஐரோப்பிய பேரரசுகள் வீழ்ந்தன. நாடுகளின் எல்லைகள் மாறின. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. மீண்டும் இவ்வாறான போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன், உலக வரலாற்றில் முதல் முறையாகப் பன்னாட்டு அமைப்பான நாடுகளின் சங்கம் (League of Nations) ஒன்று உருவானது. இப்போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டை இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
RealAudioMP3 நிறுத்துங்கள், போரை நிறுத்துங்கள் என்று, எனது முழு இதயத்தோடு உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். போரினால் எல்லாம் இழக்கப்படுகின்றன. அமைதியினால் எதுவுமே இழக்கப்படுவதில்லை என்பதை நினைவில் இருத்துங்கள். சகோதர சகோதரிகளே, ஒருபோதும் போர் வேண்டாம். மத்திய கிழக்கிலும் ஈராக்கிலும் உக்ரேய்னிலும் நடக்கும் சண்டைகள் பற்றி, சிறப்பாக, இப்போர்களில் பாதிக்கப்படும் சிறார் பற்றி இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். தரமான வாழ்வை எதிர்நோக்கும் இவர்களின் நம்பிக்கையை நாம் பறித்துக்கொள்கிறோம். குண்டுகளை, பொம்மைகளாக நினைத்து இவர்கள் விளையாடி இறக்கின்றனர் மற்றும் உறுப்புக்களை இழக்கின்றனர். முதல் உலகப்போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டை நினைவுகூரும் துக்க நாளில், நாம் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். கடந்தகாலத் தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு இந்த நினைவுநாள் உதவும் என நம்புகின்றேன். வரலாற்றின் பாடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, பொறுமை மற்றும் துணிச்சலான உரையாடல் வழியாக நாம் அமைதியைப் பெற முடியும். இலட்சக்கணக்கான மக்கள் இறக்கவும், பெருமளவில் அழிவுகள் ஏற்படவும் காரணமான இந்த முதல் உலகப் போரை அப்போதைய திருத்தந்தை 15ம் பெனடிக் அவர்கள், அறிவற்ற படுகொலைச் செயல் என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் உலகில் சண்டைகள் நிறுத்தப்படுவதற்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதோடு, இச்சனிக்கிழமை மாலையில் தென் இத்தாலியின் கசெர்த்தா நகரில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு நிகழ்த்திய திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்...
“தீமைக்கும், வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் நாம் உடன்படக் கூடாது, அவற்றை விலக்கி நடந்து கடவுளின் நண்பர்களாக மாற வேண்டும். கடவுளின் நண்பர்களாக மாறுபவர்கள் சகோதர சகோதரிகளை அன்பு செய்வார்கள். நாம் நம் சகோதர சகோதரிகளை அன்பு செய்து மனித உயிரையும், நலவாழ்வையும், சுற்றுச்சூழலையும் இயற்கையையும் பாதுகாப்பதற்கு நம்மை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்”
என்றும் கூறினார் RealAudioMP3 . ஆம். அன்பு நெஞ்சங்களே, நம் சகோதர சகோதரிகள்மீது உண்மையான அன்பு இருந்தால் இத்தனை போர்களும், அழிவுகளும் இடம்பெற்றிருக்காது. அந்தக் காட்டில் இருந்த மூங்கில் ஒருநாள் கத்தியால் வெட்டப்பட்டது. அதனை நெருப்புக் கம்பி துளைத்தபோது, ஐயோ, உடல் புண்ணாகிறதே என்று கதறி அழுதது மூங்கில். அதைக் கவனித்துக்கொண்டிருந்த காற்று மூங்கிலிடம், சற்றுப் பொறுமையாக இரு என்று ஆறுதல் சொன்னது. சிறிது நேரத்தில் மூங்கில் பூல்லாங்குழலானது. அந்த மேடையில் உலகமே மயங்கும் இசையையும் அது அள்ளிப் பொழிந்தது. அதைப் பார்த்த காற்றின் மேனி சிலிர்த்தது. மேலும் அது மூங்கிலிடம் சொன்னது - பண்பட்டவன் புண்பட்டவன் என்று. காசி ஆனந்தன் கதைகள் நூலில் இது கொடுக்கப்பட்டுள்ளது. புண்பட்டவர்கள் பண்பட்டவர்கள் ஆகிறார்கள். ஆனால் மனித வரலாற்றில் பல நிகழ்வுகள் இதற்கு எதிர்மறையாக இருப்பதாகவே தெரிகின்றது. வத்திக்கான் வானொலி அன்பு நெஞ்சங்களே, நம் வாழ்க்கையின் கடந்தகாலத் தவறுகள் நம்மைப் புண்படுத்தியிருக்கலாம். அதேநேரம் பிறரையும் வேதனைப்படுத்தியிருக்கலாம். பிறரது வாழ்வைச் சீரழித்திருக்கலாம். அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு பண்பட்ட வாழ்க்கை வாழ உறுதி எடுப்போம். தனிமனித மாற்றமே சமுதாய மாற்றத்துக்கு வித்திடும் என்பதை உணருவோம். நீ எவ்வாறு இருக்கவேண்டுமென்று நீ படைக்கப்பட்டிருக்கிறாயோ அவ்வாறு நீ வாழ்ந்தால் இந்த முழு உலகையும் சுடர்விடச் செய்வாய் என்று சொன்ன புனித சியன்னா கத்ரீன் அவர்களின் கூற்றைச் சிந்திப்போம். நமது கடந்தகாலத் தவறுகள் நிகழ்காலப் பாடமாகட்டும்







All the contents on this site are copyrighted ©.