2014-07-28 15:50:55

புனிதரும் மனிதரே:எந்நிலையிலும் பிறரைக் குறைசொல்லாதவர்(St. Lydwine)


லிட்வினுக்கு 16 வயது நடந்தபோது, ஒருநாள் தனது நண்பர்களோடு பனிச்சறுக்கு விளையாடினார். அப்போது ஒரு நண்பர் வந்து மோதியதில் லிட்வின் கீழே விழுந்து அவரது வலதுபக்க விலா எலும்பு முறிந்துவிட்டது. அதன்பின்னர் லிட்வின் படுத்த படுக்கையானார். அவரது இடது கையைத் தவிர மற்ற உறுப்புகள் வாத நோயால் தாக்கப்பட்டன. வாய், காது, மூக்கு ஆகிய உறுப்புக்களிலிருந்து இரத்தம் வடிந்தது. அவரது உடலில் சீழ்க்கட்டி உருவாகி, பின்னர் அது வெடித்தபோது லிட்வின் கடும் வேதனையை அனுபவித்தார். லிட்வின் உடலிலிருந்து பெரிய துண்டுகள் கீழே விழுந்தன. இந்நோய்களிலிருந்து லிட்வின் குணமாகவே இல்லை. உடலுக்குள் பலவகையான நோய்களை அனுபவித்த நோயாளிகளுள் ஒருவர் லிட்வின் என்று அப்போது சொல்லப்பட்டார். லிட்வின் கடுமையாய் நோன்பிருந்தார். ஒரு சிறிய ஆப்பிள் பழத் துண்டு, ஒரு பேரீச்சைப் பழத் துண்டு ஆகியவையே இவரது உணவு. நோயினால் கடும் வேதனைகளை அனுபவித்த லிட்வின், தொடர்ந்து பல இறைக்காட்சிகளையும் கண்டார். லிட்வின் அவர்களின் செபத்தால் பலர் குணமடைந்தனர். ஒருமுறை, இவர் பிறந்த Schiedam நகரை ஆக்ரமித்திருந்த படைவீரர்கள், லிட்வின் நோன்பிருப்பதைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பினர். இதனால் நான்கு படைவீரர்கள், லிட்வினிடம் சென்று, நீ கருத்தாங்கி இருப்பதாலே உனது உடம்பு வீங்கி இருக்கிறது, உனது ஊர் பங்குக்குருவே இதற்குக் காரணம் என்று இகழ்ந்தனர். அனைத்திலும் பொறுமையாக இருந்த லிட்வின் தனது 53வது வயதில் 1433ம் ஆண்டு இறந்தார். இவரது உடலிலிருந்து விழுந்த தோல்கள், எலும்புகள், அடிவயிற்றின் சில பகுதிகள் ஆகியவற்றை இவரது பெற்றோர் ஒரு குடுவையில் சேகரித்து வைத்தனர். அவை மணம் வீசியதாக லிட்வின் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன. ஹாலந்து நாட்டின் புனித லிட்வின் விழா ஏப்ரல் 14.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.