2014-07-28 16:28:39

திருத்தந்தை : குழந்தைகளிடமிருந்து நம்பிக்கையைப் பறிக்காதீர்


ஜூலை,28,2014. மத்தியக்கிழக்குப்பகுதி, ஈராக், மற்றும் உக்ரைனில் இடம்பெறும் மோதல்களும் உயிரிழப்புகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என தன் ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன் மூவேளை செப உரையின் இறுதியில் இந்த அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரில் அனைத்தும் இழக்கப்படுகின்றன, ஆனால் அமைதியிலோ இழக்கப்படுவது ஒன்றுமில்லை என்றார் .
போர் என்பது எப்போதுமே வேண்டாம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, குழந்தைகளை நோக்கி என் எண்ணங்கள் செல்கின்றன, ஒரு நேர்த்தியான வாழ்வுக்கான அவர்களின் நம்பிக்கைகளை இந்தப் போர்கள் மூலம் நாம் பறித்துக்கொள்கிறோம் என்றார்.
போர்களால் இறக்கும், காயமுறும், ஊனமாகும், அநாதைகளாகும், புன்னகையை மறந்து வாழும் குழந்தைகள் குறித்து எண்ணிப் பார்ப்போம் என்றும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
முதலாம் உலகப்போர் துவங்கி இந்தத் திங்களோடு 100 ஆண்டுகள் நிறுவுறுவதையும் நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் நடைபெறும் இடங்களில் எடுக்கப்படும் முடிவுகள், பொதுநலனையும் தனிமனிதருக்குரிய மதிப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.