2014-07-26 15:23:18

மோசுல் நகரில் இடம்பெறும் அடக்குமுறைகளுக்கு பிரித்தானிய ஆயர்கள் கண்டனம்


ஜூலை,26,2014. மோசுல் நகரில் புனித இடங்களை அவமானப்படுத்தி, அப்பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டுமென இறுதி நிபந்தனைகளை அறிவித்துவரும் ISIS முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கு எதிரான தங்களின் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் பிரித்தானிய ஆயர்கள்.
பிரித்தானிய அரசுக்கும், சமய மற்றும் சமயச்சார்பற்ற நிறுவனங்களுக்கும் அந்நாட்டு ஆயர்கள் சார்பில் வேண்டுகோளை முன்வைத்துள்ள, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் அனைத்துலகப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Declan Lang அவர்கள், ஈராக்கில் நீண்ட காலமாகத் துன்புறும் மக்களின் துயர்துடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு கேட்டுள்ளார்.
ஈராக்கிய குடிமக்களுக்கு முன்வைக்கப்படும் இந்த அச்சுறுத்தல், இறைவனுக்கு எதிரான பாவம் என்றும், வாழ்வதற்கான உரிமையை மீறுவதாக உள்ளது என்றும் கூறியுள்ள ஆயர் Lang அவர்கள், ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக ஈராக்கில் வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்களையும், அவர்களின் சாட்சிய வாழ்வையும் மறக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு தனிமனிதரும் தங்களின் விருப்பம்போல் மதத்தைப் பின்பற்றுவதற்கு உரிமைவழங்கும் அனைத்துலக மனித உரிமைகள் அறிவிப்பின் எண் 18ஐயும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்
உலகின் எண்ணற்ற கிறிஸ்தவ நிறுவனங்களும், இதே மாதிரியான வேண்டுகோள்களை அனைத்துலக சமுதாயத்துக்கு முன்வைத்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.