2014-07-25 15:47:04

பாலியல் முறைகேடுகள் குறித்த திருஅவைச் சட்டம் சீரமைக்கப்படுகின்றது, திருப்பீட அதிகாரி


ஜூலை,25,2014. பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படும் அருள்பணியாளர்கள் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்கும், தண்டனைகள் வழங்குவதற்கும் திருஅவைச் சட்டத்தில் வழிமுறைகள் இருக்கின்றபோதிலும், அந்த விதிமுறைகளையும், அவ்விவகாரம் குறித்த விசாரணைகளையும் மேலும் தெளிவுபடுத்துவதற்குத் திருத்தியமைப்புப் பணிகள் நடந்து வருவதாக, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த விவகாரத்தைக் கையாளுவதற்குரிய வழிமுறைகள் நன்றாகப் புரிந்துகொள்ளப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஆயர்களுக்கு உதவும் நோக்கத்தில் இவ்விவகாரம் குறித்த திருஅவைச் சட்டத்தைத் திருத்தியமைத்து வருவதாக, திருப்பீட சட்ட விளக்கங்கள் அவைத் தலைவர் கர்தினால் பிரான்செஸ்கோ கோக்கோபல்மேரியோ அவர்கள் அறிவித்தார்.
திருப்பீடச் சார்பு நாளிதழ் லொசர்வாத்தோரே ரொமானோவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் கர்தினால் கோக்கோபல்மேரியோ.
திருஅவைச் சட்டத்தின் “நூல் VI : திருஅவையில் தடைகள்” என்ற பிரிவில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு, 2008ம் ஆண்டிலிருந்து திருப்பீட சட்ட விளக்கங்கள் அவை வேலை செய்து வருகின்றது என்றும் கூறியுள்ளார் கர்தினால் கோக்கோபல்மேரியோ.
தவறு செய்யும் அருள்பணியாளர்களுக்கு, திருஅவை சட்டம் வலியுறுத்தும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், இவ்வாறு தண்டனைகள் வழங்குவது, குற்றவாளிகள் மனம் மாறுவதை ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார் கர்தினால் கோக்கோபல்மேரியோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.