2014-07-25 14:38:30

ஜூலை 26, 2014. புனிதரும் மனிதரே. - பிரான்சிஸ்கன் சபையின் முதல் மறைசாட்சிகளுள் ஒருவர் (St. Berard of Carbio)


இத்தாலியின் கார்பியோ எனுமிடத்தில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த பெரார்டும், இவரோடு சேர்ந்து புனிதர்களான பீட்டர், ஓத்தோ, அகூர்சியுஸ் மற்றும் அஜுதுஸ் ஆகியோர் புனித பிரான்சிஸ் துவக்கிய பிரான்சிஸ்கன் சபையின் முதல் மறைசாட்சிகளாவர். 1213ல் பெரார்ட், பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். இவர் அரபு மொழியை நன்கு கற்றவராதலாலும், நல்ல மறை போதகரானதாலும், இவரையும் இவரோடு பீட்டர் மற்றும் ஓத்தோ என்னும் இரு குருக்களையும், அகூர்சியுஸ் மற்றும் அஜுதுஸ் என்னும் இரு பொதுநிலை சகோதரர்களையும் கீழை நாடுகளில் நற்செய்தி அறிவிக்க அசிசியின் புனித பிரான்சிஸ் தேர்ந்தெடுத்தார். இவர்கள் மொராக்கோவில் சென்று மறைபரப்ப பணிக்கப்பட்டனர். இவர்களின் வீரமான மறைபரப்புப் பணியாலும், இஸ்லாமைத் துறக்க இவர்கள் விடுத்த வெளிப்படையான அழைப்பாலும் கோபமுற்ற மொராக்கோ மன்னர், இவர்களைக் கைது செய்து சிறையிலடைத்தார். இவர்களை, தங்களின் கத்தோலிக்க மறையினை மறுதலிக்க வைக்க எவ்வளவோ முயன்றும் தோற்றுப் போன மொராக்கோ மன்னர், கோபத்தில் தன் உடைவாளால் இவர்களின் தலையை வெட்டிக் கொன்று இவர்களைப் பிரான்சிஸ்கன் சபையின் முதல் மறைசாட்சிகள் ஆக்கினார். இது நடந்தது ஜனவரி 16, 1220ல்.
மொராக்கோவில் மறைசாட்சிகளாக இறந்த இவர்களின் புனிதப் பொருட்கள், இத்தாலிக்குச் செல்லும் வழியில், பெப்ரவரி 1220ல் போர்த்துக்கல்லின் கொயிம்ராவுக்கு கொண்டு வரப்பட்டன. இதைப் பற்றி அறிந்த அகுஸ்தீன் சபை துறவி ஒருவர், தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டு பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். அவரே புனித பதுவை அந்தோனியார்.
பெரார்டும் அவரின் துணைவர்களும் திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துவினால் 1481ல் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.