2014-07-25 15:50:12

உலக மண்வளங்கள், மண்அரிப்பிலிருந்தும் மண்வளக்கேட்டிலிருந்தும் பாதுகாக்கப்பட FAO வலியுறுத்தல்


ஜூலை,25,2014. வருங்காலத் தலைமுறைகளுக்குப் போதுமான அளவு உணவையும், நீரையும், சத்தையும் வழங்குவதை உறுதிசெய்யும் விதத்தில் இக்காலத்தில் இன்னும் சேதமாக்கப்படாமல் இருக்கும் மண்வளங்களைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்று, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்(FAO) கேட்டுக்கொண்டுள்ளது.
மண் இன்றி இப்பூமியில் நாம் வாழ முடியாது என்று இவ்வியாழனன்று உரைத்த FAO நிறுவன உதவி இயக்குனர் Maria Helena Semedo அவர்கள், உணவுக்கும், எரிபொருளுக்கும், நார்ப்பொருள் உற்பத்திக்கும் மண் அடிப்படையாக உள்ளது என்று கூறினார்.
இக்காலத்தில் காணப்படும் மண்சுரண்டல் விகிதத்தைப் பார்க்கும்போது, இது, வருங்காலத் தலைமுறைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்குப் போதுமானதாக இருக்காது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் Semedo தெரிவித்தார்.
மண்அரிப்பு, மண்ணில் அமிலத்தன்மை, நகர்மயமாதல், வேதிய மாசுக்கேடு ஆகியவற்றால் உலகின் ஏறக்குறைய 33 விழுக்காட்டு மண்வளம் ஏற்கனவே மிகவும் தரம் குறைந்து உள்ளது என வல்லுனர்கள் கூறியுள்ளதையும் Semedo குறிப்பிட்டார்.
உலக மண் தினம், 2015ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதன் முறையாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. மேலும், 2015ம் ஆண்டை, அனைத்துலக மண்கள் ஆண்டாகவும் அறிவித்துள்ளது ஐ.நா.நிறுவனம்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.