2014-07-24 13:52:14

புனிதரும் மனிதரே – குடும்பத்தினருக்குத் தெரியாமலேயே தனது வீட்டிலே பிச்சைக்காரராய் வாழ்ந்தவர் (St. Alexius)


5ம் நூற்றாண்டில் உரோம் நகரில் செல்வக் குடும்பத்தில் பிறந்த அலெக்சியுசுக்குத் திருமணத்தில் விருப்பமில்லை. எனவே திருமணம் நடக்கவிருந்த அந்த இரவில் இரகசியமாக வீட்டைவிட்டு வெளியேறி, வட அரேபியாவின் Edessa நகருக்குச் சென்றார். தற்போதைய ஈராக், ஜோர்டன், சிரியா, சவுதி அரேபியா ஆகிய பகுதியே வட அரேபியாவாகும். Edessa நகரில் ஆலயக் கதவருகில் அமர்ந்து பிச்சையெடுத்து வாழ்ந்தார் அலெக்சியுஸ். தனக்குக் கிடைப்பதை மற்ற பிச்சைக்காரர்களோடு பகிர்ந்து கொண்டார். இவ்வாறு 17 ஆண்டுகள் கடும் செப தப வாழ்வு வாழ்ந்த அலெக்சியுஸ் உருவமே மாறியிருந்தார். இவரைத் தேடியலைந்த இவரது குடும்பத்தினர் இவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பின்னர் தார்சுக்குச் செல்வதற்காக கப்பல் ஏறினார். ஆனால் அக்கப்பல் உரோமையைச் சென்றடைந்தது. அடுத்த 17 ஆண்டுகள் உரோம் நகரில் பிச்சையெடுத்துச் சாப்பிட்டார். இவரது தந்தை Euphemianus வீட்டில் தினமும் ஏழைகளுக்கும் திருப்பயணிகளுக்கும் உணவு வழங்கப்படும். ஒருநாள் அலெக்சியுசும் மற்ற பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து இவரது தந்தை வீட்டு மேஜையில் உணவருந்தினார். இவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பணியாளர் ஒருவர் மட்டும் அலெக்சியுசைக் கண்டுகொண்டார். தன்னைக் காட்டிக்கொடுக்க வேண்டாமென அவரிடம் கேட்டுக்கொண்டார் அலெக்சியுஸ். அந்த வாழ்வில் பல பணியாளரின் ஏச்சுப் பேச்சுகளுக்கு ஆளானார். 17 ஆண்டுகள் இவரது தந்தை வீட்டு மாடிப்படிக்குக்கீழே பிச்சைக்காரராக வாழ்ந்து உயிர்நீத்தார் அலெக்சியுஸ். இவரது உடலுக்கு அருகில் காணப்பட்ட ஒரு குறிப்பை வைத்து இவரை யார் என அனைவரும் கண்டுகொண்டனர். பின்னர், இவரது தந்தை Euphemianus. இவரது வீட்டை இவருக்கு அர்ப்பணமாக்கி அதை ஆலயமாக்கினார். இவ்வாறு புனித அலெக்சியுஸ் பற்றி பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது. புனித அலெக்சியுசின் விழா மேற்கத்திய திருஅவையில் ஜூலை 17. கிழகத்திய திருஅவையில் மார்ச் 17.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.