2014-07-24 15:25:43

சிட்டம்பட்டி : பள்ளி ஆசிரியரின் சொந்த முயற்சியால் இயற்கை ஆர்வலர்களாக மாறியிருக்கும் குழந்தைகள்


ஜூலை,24,2014. மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சிவராமன் அவர்கள், தனது சொந்த முயற்சியால், அப்பள்ளியில் படிக்கும் 230 குழந்தைகளையும் இயற்கை ஆர்வலர்களாக மாற்றியிருக்கிறார்.
சிட்டம்பட்டி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 36 வகையான மரங்கள் செழித்து வளர்ந்து நிற்கின்றன. இங்குள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கை 169. அத்தனையும் சிவராமன் வழிகாட்டுதலில் இந்தப் பள்ளி மாணவர்கள் கவனமுடன் நட்டு வளர்த்தவை.
சிட்டம்பட்டிக்கு 7 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மருதூர் கிராமத்திலிருந்து 60 குழந்தைகள் சிட்டம்பட்டிக்கு படிக்க வருகிறார்கள். பேருந்து வசதி அதிகம் இல்லாத காரணத்தால், காலையிலும் மாலையிலும் இந்தக் குழந்தைகள் நடந்துதான் செல்லவேண்டும்.
ஊர் செல்லும் வரை சாலையில் இரண்டு பக்கமும் நிழலுக்கு ஒதுங்கக்கூட மரம் இல்லாத நிலை முதலில் இருந்தது. ஆனால், ஆசிரியர் சிவராமன் அவர்களின் தூண்டுதலால் உருவான ‘ஒரு மாணவன், ஒரு பாட்டில், ஒரு செடி’என்ற திட்டத்தினால், இப்போது அச்சாலையில் ஐம்பது மரக்கன்றுகள் இடுப்பளவுக்கு வளர்ந்து நிற்கின்றன.
ஒவ்வொரு மாணவனும் வீட்டிலிருந்து வரும்போது ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து வந்து, தாங்கள் நட்டு வைத்த மரக்கன்றுக்கு ஊற்ற வேண்டும். அதேபோல் மாலையில் வீடு திரும்பும்போதும் பள்ளியிலிருந்து ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துக் கொண்டுபோய் ஊற்ற வேண்டும். மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடிந்ததும் அவர்கள் பராமரித்து வந்த கன்றுகளை அடுத்து வரும் மாணவர்கள் பராமரிக்க வேண்டும்.
பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்கள், இனிப்புக்குப் பதில் மரக் கன்றுகளை மற்றவருக்குத் தருதல், ஊரிலுள்ள கருவேலம் செடிகளை வேரோடு அழித்தல், ஊரின் தெப்பக்குளத்தைச் சுத்தம் செய்து, சுற்றிலும் பனைமரங்களை நடுதல் ஆகியத் திட்டங்களையும் ஆசிரியர் சிவராமன் அவர்கள் மாணவர்களின் துணை கொண்டு நடத்தப்போவதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.