2014-07-24 15:24:54

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா. மௌனம் காக்கக் கூடாது, முதுபெரும் தந்தை சாக்கோ


ஜூலை,24,2014. ஈராக் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள வரைமுறையற்ற வன்முறையை, அகில உலக அமைப்புக்கள் கைகட்டிக் கொண்டு காண்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு நிலை என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.
முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்களுக்கு அனுப்பியுள்ள இந்த விண்ணப்பத்தில், வன்முறையாளர்கள் கிறிஸ்தவர்களுக்கு உரிய பழமை வாய்ந்த இடங்களை தீயிட்டுக் கொளுத்துவது குறித்தும் எழுதியுள்ளார்.
ISIS அமைப்புக்கு எதிராக ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கைக்கு நன்றி கூறும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், உலக நாடுகளும், ஐ.நா. அமைப்பும் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பல வழிகளில் காட்டி, மதியற்ற இந்த வன்முறையை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பழமை வாய்ந்த கோவில்களையும், துறவு மடங்களையும் மீண்டும் கட்டியெழுப்புவது முற்றிலும் இயலாத காரியம் என்பதால், அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தும் வன்முறையாளர்களைத் தடுத்து நிறுத்துவது, கலாச்சாரத்திற்கு நாம் ஆற்றும் கடமை என்றும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, கல்தேய வழிபாட்டு முறை, சிரிய ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறை, மற்றும் ஆர்மீனிய வழிபாட்டு முறையைச் சார்ந்த ஆயர்கள், Ankawa என்ற நகரில் ஜூலை 22 இச்செவ்வாயன்று நடத்திய ஒரு கூட்டத்தின் இறுதியில், ஈராக் அரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு அவசர விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / Fides







All the contents on this site are copyrighted ©.