2014-07-23 15:45:10

திருத்தந்தை பிரான்சிஸ் - வாழ்வை உறுதிசெய்வது கிறிஸ்தவர்களின் கடமை


ஜூலை,23,2014. கடவுள் வழங்கியுள்ள வாழ்வு என்ற கொடையின் புனிதத்திற்கு சாட்சி சொல்ல கத்தோலிக்கர்கள், குறிப்பாக, இளையோர் முன்வர வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
ஜூலை 27, வருகிற ஞாயிறன்று, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து வாழ்வின் நாள் 2014 என்ற கொண்டாடாட்டத்தை மேற்கொள்ளும் வேளையில், அவர்களுக்கு, திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
சாவு, அழிவு இவற்றை உறுதி செய்யும் கலாச்சாரத்தை இவ்வுலகம் பரப்பி வரும் வேளையில், மனிதரின் அடிப்படை உரிமையான வாழ்வை சட்டத்தின் வழியாகவும், இன்னும் பிற வழிகளிலும் உறுதிசெய்வது கிறிஸ்தவர்களின் கடமை என்று, திருத்தந்தையின் இச்செய்தி கூறுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளில் சிறப்பிக்கப்படும் 'வாழ்வின் நாள்' என்ற கொண்டாட்டத்திற்கு, இவ்வாண்டு, "வாழ்க்கையை வாழுங்கள், துவக்கத்திலிருந்து முடிவு வரை வாழ்வைப் பாதுகாத்து போற்றுங்கள்" என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தீராத நோயுற்றோர் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள மருத்துவர் உதவி செய்யலாம் என்ற சட்ட வரைவு அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதை எதிர்த்து, பல்வேறு சமய அமைப்புக்களும், இன்னும் பிற மனித நல அமைப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.