2014-07-23 15:47:04

டெல்லியில் திஹார் சிறைக் கைதிகளின் கைவண்ணத்தால் களைகட்டும் ஓட்டல்


ஜூலை,23,2014. தெற்காசியாவிலுள்ள மிகப் பெரிய சிறைச்சாலையான திஹார் சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்கான ஒரு முயற்சியாக, இந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஓர் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.
சிறை கைதிகளின் விடுதியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த உணவகத்தில், ஓட்டல் நிர்வாகப் பள்ளியிலிருந்து பயிற்சி பெற்ற கைதிகள் பணி புரிகின்றனர்.
"Tihar Food Court" என்ற பெயருடன் இயங்கிவரும் இந்த உணவகத்தின் நிர்வாகி மொஹமத் அசிம் அவர்கள், ஒரு கொலைக் குற்றத்திற்காக 14 ஆண்டுகள் திஹார் சிறையிலிருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த உணவகத்தில் பணிபுரிய வேண்டுமெனில், கைதிகள் குறைந்தபட்சம் 'ஒழுக்கமாக' 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பள்ளி உயர்கல்வியும் கற்றிருக்கவேண்டும்.
கைதிகள் சிறையிலிருந்து உணவகம் செல்ல சைக்கிள் பயன்படுத்துகிறார்கள் அல்லது நடந்து செல்கிறார்கள். அவர்கள் நம்பத்தகுந்தவர்கள் என்று கூறும் அதிகாரிகள், அவர்களுடன் யாரையும் காவலுக்கு அனுப்புவதில்லை என்று கூறினர்.
இந்த உணவகத்திலிருந்து கிடைக்கும் வருவாய், சிறை கைதிகளின் நலனுக்கும், அவர்களின் தொழிற்கல்வி பயிற்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று திஹார் சிறைச்சாலையின் பிரதிநிதி சுனில் குப்தா அவர்கள் தெரிவிக்கிறார்.
ஒரு காலத்தில் ஊழல், போதைப்பொருள் உபயோகம், சக கைதிகளை துன்புறுத்தல் போன்ற அநீதிகளுக்கு பெயர்போன திஹார் சிறையில், தற்போது தொழிற்கல்வி பயிற்சிகள், ஓவியங்கள் வரைதல் போன்ற மறுவாழ்விற்கான பயிற்சிகள் கிட்டதட்ட 13,552 கைதிகளுக்கு அளிக்கப்படுகின்றன.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.