2014-07-23 15:45:44

ஆயர்களின் தெரிவு, பண்புகள் குறித்து ஆயர்கள் திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Marc Ouellet பேட்டி


ஜூலை,23,2014. தன் ஆடுகளின் மணத்தை நன்கு உணர்ந்த மேய்ப்பராக, மக்களுக்கு நெருங்கியவராக ஆயர்கள் இருக்கவேண்டும் என்று திருத்தந்தை கூறியதை, வத்திக்கான் உயர் அதிகாரி மீண்டும் ஒருமுறை தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயர்கள் திருப்பேராயத்தின் தலைவரான கர்தினால் Marc Ouellet அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservarore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில், ஓர் ஆயருக்குரிய பண்புகளை திருத்தந்தை எவ்விதம் நோக்குகிறார் என்பதை விளக்கிக் கூறியுள்ளார்.
மக்களுக்கு நெருங்கியிருத்தல், ஓர் இளவரசனாக அல்ல, மாறாக, ஒரு தந்தையாக, சகோதரனாக உழைக்கும் மனம் கொண்டிருத்தல், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில், பணியில் அதிக நேரம் செலவிடுதல் ஆகியவை ஆயர்களின் முக்கியப் பண்புகள் என்று திருத்தந்தையின் உரைகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம் என்பதை கர்தினால் Ouellet அவர்கள் குறிப்பிட்டார்.
சமுதாயத்தின் விளிம்புகளை நோக்கிச் செல்லும் திருஅவை என்பதை திருத்தந்தை அடிக்கடி வலியுறுத்திவருவதால், அதற்கு உகந்ததுபோல் ஆயர்களின் நியமனங்கள் நடைபெறுவதையும் காண முடிகிறது என்று கர்தினால் Ouellet அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
ஆயர்களின் தெரிவு, ஆயர்கள் மத்தியில் நிலவ வேண்டிய குடும்ப உணர்வு, ஆயர்கள் அவை எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் ஆகியவற்றைக் குறித்து கர்தினால் Ouellet அவர்கள் இப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
'தேர்ந்து தெளிதல்' என்ற எண்ணத்தை வலியுறுத்தும் புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகப் பயிற்சிகளில் அனைத்து ஆயர்களும் போதுமான வளர்ச்சி பெறவேண்டும் என்பதையும் கர்தினால் Ouellet அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.