2014-07-22 15:03:42

புனிதரும் மனிதரே - சாத்தானைக் கிழித்து வெளியேறிய இளம்பெண்


அந்தியோக்கு நகரில், பிற தெய்வங்களுக்குப் பலி கொடுத்து வாழ்ந்த குரு ஒருவரின் மகளாகப் பிறந்தவர், மார்கரெட். இவருக்கு 'மரீனா' என்ற மறுபெயரும் உண்டு. இளம் பெண் மார்கரெட், கிறிஸ்தவ மறையைத் தழுவினார் என்பதை அறிந்த அவரது தந்தை, அவரை வீட்டைவிட்டு துரத்திவிட்டார். ஆடு மேய்க்கும் பணியில் ஆனந்தமாக வாழ்ந்துகொண்டிருந்த இளம்பெண் மார்கரெட்டை அவ்வூரின் ஆளுநர், Olybrius காம வெறியுடன் நெருங்கினார். அவரது ஆசைகளுக்கு இணங்க மறுத்த மார்கரெட்டை, கிறிஸ்தவர் என்று குற்றம் சாட்டி சிறையிலடைத்தார் Olybrius.
சிறையில் சித்ரவதைகள் பலவற்றை ஏற்றார் இளம்பெண் மார்கரெட். இவர் இருந்த சிறைக்குள் பறவை நாகம் வடிவில் வந்த சாத்தான், இவரை விழுங்கிவிட்டது. இளம் பெண் மார்கரெட் தன் கரங்களில் எப்போதும் சிலுவையை வைத்திருந்தார். எனவே, சாத்தான் அவரை விழுங்கியபோது, மார்கரெட் கைகளில் இருந்த சிலுவை, சாத்தானின் தொண்டையைக் கிழிக்க, வலி தாங்காமல், அது மார்கரெட்டை வெளியே துப்பிவிட்டது. இது ஒரு பாரம்பரியக் கதை.
இளம்பெண் மார்கரெட்டைக் கொல்வதற்கு அவரை நெருப்பில் எரித்தனர், நீரில் அமிழ்த்தினர். இந்தக் கொலை முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயின. மார்கரெட் தன் மரணத்தைத் துணிவுடன் எதிர்கொண்டதைக் கண்ட பலர், கிறிஸ்தவ மறையைத் தழுவினர். அவர்கள் அனைவரும் உடனடியாகக் கொல்லப்பட்டனர். இறுதியாக, இளம் பெண் மார்கரெட், தலை வெட்டுண்டு, உயிர் துறந்தார். அந்தியோக்கு நகரின் புனித மார்கரெட் அவர்களின் திருநாள், ஜூலை 20ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.