2014-07-22 16:44:00

இன்றைய உலகின் பெரும் அச்சுறுத்தல், பேராசையால் நசுக்கப்பட்ட இதயங்களின் தனிமை, திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூலை,22,2014. இன்றைய உலகின் பெரும் அச்சுறுத்தல், பேராசையால் நசுக்கப்பட்ட இதயங்களின் தனிமையே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபிலடெல்பியாவில் நடக்கவிருக்கும் 8வது உலக குடும்பங்கள் மாநாட்டுக்கு, திருத்தந்தை 2ம் ஜான் பால், ஜான்னா பெரெத்தா ஆகிய இரு புனிதர்களும் பாதுகாவலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 27ம் தேதி புனிதராக உயர்த்தப்பட்ட திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் உலக குடும்பங்கள் மாநாட்டை உருவாக்கியவர். மேலும், 1994ம் ஆண்டு மே 16ம் தேதி திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்ட ஜான்னா பெரெத்தா அவர்கள் கர்ப்பிணி பெண்களுக்குப் பாதுகாவலர்.
குழந்தை நல மருத்துவரும், நான்கு குழந்தைகளுக்குத் தாயுமான புனித ஜான்னா பெரெத்தா அவர்கள் 1962ம் ஆண்டில் இறந்தார். இவர், நான்காவது குழந்தையை கருத்தாங்கியிருந்தபோது கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது குழந்தையைப் பெற்றெடுக்கும்வரை அறுவை சிகிச்சைக்கு மறுத்தவர்.
மேலும், திருஅவை தன்னை நினைவுகூர விரும்பினால், தான் வாழ்வு மற்றும் குடும்பத்தின் திருத்தந்தையாக நினைவுகூரப்பட வேண்டுமென, திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறியதாக அருள்பணி Slawomir Oder கூறியுள்ளார்.
8வது உலக குடும்பங்கள் மாநாடு, 2015ம் ஆண்டு செப்டம்பர் 22 முதல் 27 வரை ஃபிலடெல்பியாவில் நடைபெறவுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.