2014-07-21 15:50:03

வாரம் ஓர் அலசல் – எத்தீமையையும் பார்க்காதே, கேட்காதே, பேசாதே


ஜூலை,21,201 RealAudioMP3 4. இளைஞர் ஒருவர் கடவுளிடம் வரம் கேட்டு இவ்வாறு செபித்தார். கடவுளே, ஒருவர் இறந்தபின் சொர்க்கத்துக்குப் போகிறாரா, நரகத்திற்குப் போகிறாரா என்றே தெரியவில்லை. ஏனெனில் அங்கு போவோர் யாரும் திரும்பி வருவதே இல்லை, எல்லாம் ஒருவழிப் பாதையாக இருக்கிறது, எனவே சொர்க்கத்தையும், நரகத்தையும் பார்த்துவிட்டு வர வரம் தாரும். கடவுளும் வரம் தந்தார். அவர் முதலில் சொர்க்கத்துக்குப் போனார். அங்கே கருணையே உருவான கடவுள்.. எல்லாம் ஆசீராக அருளாக, அமைதியாக இருந்தது. பின்னர் நரகத்திற்குப் போனார். அங்கே ஒரே ஆட்டம், கொண்டாட்டம். பார்க்கும் இடமெல்லாம் பாசமழையில் பசாசுகள். அட... இந்த இடத்துக்கா போகக் கூடாது என சமயப் போதகர்களும் மற்றவர்களும் போதிக்கிறார்கள், இவர்கள் தாங்களும் அனுபவிக்காமல் பிறரையும் அனுபவிக்க விடமாட்டார்கள் போலிருக்கிறதே என்று நினைத்து மண்ணுலகம் திரும்பினார் அந்த இளைஞர். தான் தோன்றித்தனமாக தீய வழியில் நடந்தார். மற்றவர்களையும் தவறான பாதையில் நடக்கத் தூண்டினார். இந்த இளைஞரும் இறந்தார். இவரது பாடையைத் தூக்கிச் சென்றவர்கள் இவருக்கு நிச்சயம் நரகம்தான் என்று பேசிக்கொண்டார்கள். இளைஞரும் நரகத்திற்குப் போனார். ஆனால் உள்ளே போனவருக்கு ஒரே அதிர்ச்சி. அவர் முன்னர் பார்த்த ஆனந்தக் கூத்தாட்டம் அங்கு இல்லை. எங்கும் மரண ஓலம், அழுகை, பற்கடிப்பு.... பேய்கள் நறநறவென பற்களைக் கடித்தவண்ணம் சுற்றி வந்தன. இதைப் பார்த்த இளைஞர் தலைமைப் பேயிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அது, நன்றாக ஏமாந்து போனாயா, அப்போது நீ பயணியாக வந்தாய். பயணிகளுக்கு இப்படித்தான் காட்டுவோம் என்றது.(குட்டிக்கதைகள் சேவியர் அந்தோணி சே.ச)
தீயவனுடைய வேலையே இதுதான். அவன், பளபளப்பான இவ்வுலக வாழ்வைச் சொர்க்கமாகக் காட்டி, மறுஉலக நரக வாழ்வுக்கு வித்திடுவான். ஏனெனில் சொர்க்கத்துக்கு கவர்ச்சிக் காட்டத் தெரியாது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறியதுபோல, RealAudioMP3 தீயவன் என்பவன் களைச்செடியாகும். தீயவன் மக்களையும், குடும்பங்களையும், நாடுகளையும் பிரிப்பதற்கு விரும்புகின்றவன். தீயவன் பெரும் தந்திரக்காரன். அவன் நன்மைகள் மத்தியில் தீமைகளை விதைப்பவன். அப்படி அவன் விதைப்பதால் நன்மைகளிலிருந்து தீமைகளை எளிதாகப் பிரிக்க முடியாமல் போய்விடுகிறது. அன்பு நேயர்களே, புனிதபூமியிலும், கிழக்கு ஐரோப்பாவின் உக்ரேய்ன் பகுதியிலும், உலகின் சில பகுதிகளிலும் இந்நாள்களில் நடப்பது இதுதான். இஞ்ஞாயிறு சிந்தனையிலும் இவற்றைப் பற்றி நாம் கேட்டோம். இஞ்ஞாயிறன்று பாலஸ்தீனாவின் காஸாப் பகுதியில் இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்ததையொட்டி, ஐ.நா. நிறுவனத்தின் பாதுகாப்பு அவை, இஞ்ஞாயிறு இரவு அவசரக் கூட்டம் நடத்தி உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்று வலியுறுத்தியுள்ளது.
இம்மாதம் 8ம் தேதி, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் புரட்சிக்குழுவினருக்கு எதிராகத் தொடங்கிய தாக்குதல்களில், இதுவரை காஸாவில் பலியானோர் எண்ணிக்கை 501 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 3,135 ஆக உள்ளது என காஸா நலவாழ்வு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் புரட்சியாளர்களிடம் இருக்கும் காஸா பகுதியில் கடந்த 13 நாள்களுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தொடர் தாக்குதலுக்குக் காரணம் பழிக்குப்பழி நடவடிக்கை என்பது, அன்பு நேயர்களே, நம் அனைவருக்கும் தெரியும். கடந்த ஜூன் 12ம் தேதி பாலஸ்தீனாவின் மேற்குக்கரைப் பகுதியில் மூன்று இஸ்ரேல் இளையோர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஒரு பாலஸ்தீனிய இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பழிக்குப்பழி ஆயுதத் தாக்குதல்கள். புனிதபூமியில் பதட்டநிலைகளும் தொடர்கின்றன. மேலும், உக்ரேய்ன்-இரஷ்ய எல்லைப் பகுதியில் இரஷ்ய ஆதரவு உக்ரேய்ன் புரட்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகச் சொல்லப்படும் MH17 மலேசிய விமான விபத்துக்கு கண்டனம் தெரிவித்த உக்ரேய்ன் திருஅவைத் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk அவர்கள், தீமை, அமைதிக்கும், உலகின் பாதுகாப்புக்கும் உண்மையான அச்சுறுத்தல் என்பதை இந்த கோர விபத்து வெளிப்படுத்துகின்றது என்று கூறினார். இந்த விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் இறந்துள்ளனர். இவர்களுள் நூறு பேர் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் நடந்துவரும் உலக எய்ட்ஸ் நோய்க் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற பிரதிநிதிகள். புகழ்பெற்ற எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சியாளர் Joep Lange அவர்களும் இறந்தவர்களில் ஒருவர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியதுபோல, நாம் பிறரை RealAudioMP3 எந்த அளவையால் தீர்ப்பிடுகிறோமோ அதே அளவையால் நம் வாழ்வின் அந்த இறுதிநாளில் தீர்ப்பிடப்படுவோம். நாம் பிறருக்கு எந்த அளவுக்கு கருணை காட்டினோமோ அதே அளவுக்குத்தான் நாமும் கருணை காட்டப்படுவோம். பிறரை ஏவுகணைகளால் சாகடித்தால் அதே ஆயுதமே நமது சாவுக்கும் காரணமாகும். மாறாக, கருணையை அள்ளிக் கொடுத்தால் நம் வாழ்வு முழுவதும் பிறரது அன்புமழையால் நனையும். அன்பு நேயர்களே, இந்த மனித வாழ்க்கை, நல்லவை தீயவை என எல்லாவற்றையும் நம்முன் வைக்கின்றது. இந்த வாழ்க்கைப் பட்டியலில் நமக்கு விருப்பமானவையும், விருப்பமில்லாதவையும் இருக்கின்றன. ஆனால் எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது அவரவரைப் பொருத்தது. நமக்குப் பிடிக்காத காரியங்களைத் தேர்ந்தெடுத்தால் அவை நம்மில் எதிர்மறை உணர்வுகளை அதிகரிக்கும். நாம் பிறரை மோசமானவர் என்று தீர்ப்பிட்டால் அது நம்மில் எதிர்மறை உணர்வுகளையேக் கொண்டுவரும். ஏனெனில் நம்முடைய சிந்தனைகள் அலைஅலையாக இந்தப் பிரபஞ்சத்தில் உலாவுகின்றது. நம்மிடமிருந்து வெளியே செல்லுகின்ற எண்ண அலைகள் திரும்பி நம்மிடமே வருகின்றன. அது திரும்பி நம்மிடம் வரும்போது பல மடங்காகப் பெருகி வருகின்றன. நம்மிடமிருந்து செல்லுகின்ற எண்ண அலைகள் நல்லவையாக இருந்தால், அவை திரும்பி வரும்போது பல மடங்காகப் பெருகி நமது வாழ்விற்கு ஆசீர்வாதமாகக் கிடைக்கும்.
அதேபோன்று நம்மிடம் இருந்து செல்லுகின்ற எண்ண அலைகள் அடுத்தவர்க்குத் தீமை விளைவிக்கும் எண்ணங்களாக இருந்தால், அவை திரும்பி வரும்போது பல மடங்கு தீமைகளாகப் பெருகி நம் வாழ்வில் பெரும் கேடுகளை விளைவிக்கும். ஒருவர் ஏதோ ஒன்றை வைத்திருப்பதற்காக அவர்மீது பொறாமைப்பட்டால், அது நாம் விரும்பும் பொருளிலிருந்தே நம்மைத் தூர வைத்துவிடும். ஆதலால் நாம் விரும்பும் பொருள்களை அன்பு செய்வதால் மட்டுமே அவை நமக்குக் கிடைக்கும் என Rhonda Byrne என்பவர் சொல்கிறார். நாம் எவ்வளவுக்கு அதிகமாகக் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக நாம் பெறுகிறோம். இப்படிச் செயல்படுவோருக்கு, இந்த அற்புதம்தான் எப்பொழுதும் நடக்கும் என்று சொன்னார் Rainer Maria Rilke. கடந்தவாரத்தில் வன்முறைகள் பற்றியே அதிகமான செய்திகளை வாசித்தோம். ஒரு பெரியவர் சொல்கிறார் - மனிதர் தன்னை மதிக்கக் கற்றுக்கொண்டால் அடுத்தவர்க்குத் துன்பமும் மனக்கஷ்டமும் கொடுக்கமாட்டார். ஏனெனில் தன்னிடமுள்ள அதே உயிர்த்தன்மைதான் அடுத்தவர்களிடமும், மற்ற பொருள்களிடமும் இருப்பதை அவர் உணர்வார். பாறை போன்ற அசையாப் பொருள்களில் அது உறக்கத்தில் இருக்கின்றது. மற்ற உயிரினங்களில் அது பலவகைச் செயல்களின் மூலமாகத் தன்னை வெளிப்படுத்துகின்றது என்று.
ஒரு புத்த மடாயலத்தில், சமையல் வேலைசெய்யும் Dairyo என்ற சீடர், தன்னுடைய வயதான போதகர் Bankei அவர்களுக்கு, புதிதாக சமைக்கப்பட்ட மிசோ(MISO) உணவைக் கொடுத்து வந்தார். தான் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட்டுவருதைக் கவனித்த பெரியவர் Bankei, ஒருநாள் Dairyoவை அழைத்து, நான் இனிமேல் உணவே சாப்பிடக் கூடாது எனத் தீர்மானித்துவிட்டாய், அப்படித்தானே என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். Dairyo, கதவுக்கு வெளியே உட்கார்ந்துகொண்டு தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் Bankei தனது அறைக் கதவை திறக்கவே இல்லை. இப்படி ஏழு நாள்கள் கடந்துவிட்டன. கடைசியில் வேறு ஒரு சீடர் வந்து, போதகரே, போதும் இந்த விளையாட்டு. நீங்கள் செய்வது உங்களுக்குச் சரியாக இருக்கலாம், ஆனால் இந்த இளம் சீடன் மேலும் பட்டினி கிடக்க முடியாது என்று சொன்னார். இதைக் கேட்டு கதவைத் திறந்து வெளியே வந்தார் Bankei. பிறகு Dairyoவிடம், மற்ற சீடர்கள் எப்படிச் சாப்பிடுகிறார்களோ அதைப்போலவே நானும் உண்ண வேண்டும். தலைமைப் போதகராக இருந்தாலும்கூட அதை நீ மறக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன் என்று சொன்னார்.
ஆம். எவ்வுயிரையும் தன்னுயிர்போல் மதிக்கக் கற்றுக்கொள்ளும் மனிதர் அன்பையும் கருணையையுமே வெளிப்படுத்துவார்கள். அவர்களும் அன்பாலும் கருணையாலுமே நிறைக்கப்படுவார்கள். எனவே, எந்தத் தீமையையும் பார்க்காதே, எந்தத் தீமையையும் கேட்காதே, எந்தத் தீமையையும் பேசாதே என்ற பொருளில் காந்திஜியின் மேஜைமீதிருந்த மூன்று பொம்மைக் குரங்குகள் உணர்த்தும் அறிவுரைகளை நினைவுகூர்வோம். அன்பர்களே, தீமையான எதையும் பார்க்காமல், கேட்காமல், பேசாமல் இருப்போம். இயேசு சொன்னார் - எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும் என்று.







All the contents on this site are copyrighted ©.