2014-07-21 15:44:54

புனிதரும் மனிதரே – தொழிலுக்காக விசுவாசத்தை மறுதலிக்க மறுத்தவர்கள் (Sts Justa and Ruffina)


ஜஸ்தா, ரூஃபினா ஆகிய இருவரும் அக்கா தங்கைகள். இவர்கள் தங்கள் குடும்பத் தொழிலாகிய மண்பாத்திரங்கள் செய்து பெற்றோருக்கு உதவியாக இருந்தனர். இஸ்பெயினில் அவர்கள் வாழ்ந்த Seville பகுதியில் மூடத்தனமான சிலைவழிபாடு பரவியிருந்தது. ஒருநாள் இந்த வழிபாட்டுக்காக மக்கள் இச்சகோதரிகளிடம் மண்பாத்திரங்கள் கேட்டனர். இதற்கு இச்சகோதரிகள் மறுக்கவே, அம்மக்கள் இச்சகோதரிகளின் வீட்டுக்குச் சென்று விற்பனைக்காக வைத்திருந்த அனைத்து மண்பாத்திரங்களையும் சுக்கு நூறாக உடைத்துப் போட்டனர். ஏழைகளாகிய ஜஸ்தாவும், ரூஃபினாவும் ஆத்திரமடைந்து அம்மக்கள் வணங்கும் சிலைகளை உடைத்தனர். இதனால் அம்மக்கள் ஜஸ்தாவையும், ரூஃபினாவையும் அந்த ஊர் ஆளுனரிடம் காட்டிக் கொடுத்தனர். ஆளுனரின் ஆணைப்படி இச்சகோதரிகள் கைது செய்யப்பட்டு அவர் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதைக் கண்டு, அவர்களை பாறைமீது கிடத்தி இரும்புக் கம்பியால் இரத்தம் கொட்டக்கொட்ட அடித்தனர். அதிலும் மனம் மாறவில்லை. எனவே உணவும் தண்ணீரும் கொடுக்காமல் சிறையில் பட்டினி போட்டார் ஆளுனர். அதிலும் உறுதியாய் இருக்கவே, சியெரா மொரேனா வரை வெறுங்காலுடன் நடக்க வைத்தனர். அதிலும் மனம் மாறாததால் மீண்டும் பட்டினிபோட்டு சிறையில் அடைத்தனர். இதில் இறந்தார் ஜஸ்தா. இவரின் உடலை கிணற்றில் வீசினர். அக்காவுக்கு நேர்ந்ததைப் பார்த்து தங்கை மனம் மாறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. பின்னர் சிங்கத்தைப் பட்டினிபோட்டு கேளிக்கை அரங்கில் ரூஃபினாவிடம் சிங்கத்தை அவிழ்த்துவிட்டனர். அதுவோ வீட்டுப் பூனைபோன்று ரூஃபினாவின் அருகில் இருந்துவிட்டு திரும்பியது. இதனால் கோபத்தில் ரூஃபினாவை மூச்சுத் திணற கழுத்தை நெறித்து கொலை செய்தனர் அல்லது தலையை வெட்டிக் கொலை செய்தனர் எனச் சொல்லப்படுகிறது. கி.பி. 287ம் ஆண்டு ஆயர் சபினுஸ் ரூஃபினாவின் உடலைக் கண்டெடுத்து அவரது அக்காவின் கல்லறைக்கு அருகில் புதைத்தார். ஜஸ்தா கி.பி. 268ம் ஆண்டிலும், ரூஃபினா கி.பி. 270ம் ஆண்டிலும் பிறந்தவர்கள். இம்மறைசாட்சிகள் விழா ஜூலை 19. இவ்விரு புனித சகோதரிகள் மண்பாத்திரங்கள் செய்வோர் மற்றும் அவற்றை விற்பனை செய்வோருக்குப் பாதுகாவலர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.