2014-07-19 15:12:59

இலங்கையில் சிறார் உரிமை மீறல் அதிகரிப்பு


ஜூலை,19,2014. இலங்கையில் சிறுவர்கள் தவறாக நடத்தப்படல் தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளில் 2 இலட்சத்து 10 ஆயிரம் புகார்கள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அவையின் தலைவர் அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கிடைக்கப் பெற்றவற்றுள், 25 ஆயிரம் புகார்கள் விசாரணை செய்யப்பட்டு, தீர்வும் அளிக்கப்பட்டு, இதில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் அனோமா திசாநாயக்க.
2013ம் ஆண்டில் 691 சிறுவர்களைப் பலவந்தமாகக் கொண்டு சென்று, பாலியலுக்கு உள்ளாக்கப்பட்ட புகார்களும், 681 சிறுவர்கள் பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்டது குறித்த புகார்களும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அவைக்கு வந்துள்ளன.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் 228 சிறுவர்கள் கட்டாயமாகப் பாலியலுக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வுகளும், 259 சிறுவர்கள் தவறாக நடத்தப்பட்டது குறித்த நிகழ்வுகளும் புகார்களாக வழங்கப்பட்டுள்ளன.
இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ எழுத்து மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு 48 மணி நேரத்திற்குள் காவல்துறை உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அவையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : Tamil Win








All the contents on this site are copyrighted ©.