2014-07-18 15:44:25

புனிதரும் மனிதரே : அன்னைமரியிடம் வரம் கேட்டுப் பெற்றவர்


ஜூலை, 19,2014. இன்று ஏறத்தாழ 763 ஆண்டுகளுக்கு முன்னர், 1251ம் ஆண்டில் கார்மேல் துறவு சபை இடையூறுகளுக்கு உள்ளானது. அச்சமயத்தில் இச்சபையைச் சார்ந்த மிகவும் பக்தியுள்ள சைமன் என்ற துறவி, தனது சபைக்கு ஏதாவது ஒரு தனிப்பட்ட சலுகையை வழங்குமாறு அன்னைமரியிடம் உருக்கமாகச் செபித்து வந்தார். இந்த நல்ல துறவியின் செபத்தைக் கேட்ட அன்னைமரியா, 1251ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கேம்பிரிட்ஜில் ஒரு கறுத்த ஆரஞ்சு வண்ண உத்தரியத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம் அவருக்குக் காட்சி கொடுத்துச் சொன்னார் : "எனது அருமை மகனே, இந்த உத்தரியம் உங்கள் சபைக்குரியது. நான் உங்களுக்கு வழங்கும் சிறப்புச் சலுகையின் அடையாளம் இது. இதனை உனக்காவும், உனது கார்மேல் மலைச் சிறாருக்காகவும் நான் பெற்றது. இதை அணிந்துகொண்டு இறப்பவர்கள் நித்திய நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவார்கள், இது மீட்பின் சிறப்பு அடையாளம், ஆபத்தில் காக்கும் கேடயம், அமைதி மற்றும் பாதுகாப்புக்கென சிறப்பாக வழங்கப்படும் உறுதி" என்று. கழுத்தில் அணியும் இந்த உத்தரியத்தை அன்னைமரியாவிடமிருந்து பெற்றவர் புனித சைமன் ஸ்டாக். ஆங்கிலேயரான இவர் 1254ம் ஆண்டில் இலண்டனில் கார்மேல் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். Stock என்றால் அடிமரம் என்று பொருள்.
புனித சைமன் அவர்களின் இளமைக்கால வாழ்வு பற்றி அவ்வளவாகத் தெரியவில்லையெனினும், இவர் தனது 12வது வயதிலிருந்தே ஓர் ஓக் மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த காலியான இடத்தில் துறவியாக வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவர் இளைஞனாக இருந்தபோது புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அங்கு கார்மேல் சபைத் துறவிகளுடன் சேர்ந்தார். பின்னர் ஐரோப்பா திரும்பி, கார்மேல் சபையின் பல இல்லங்களை நிறுவினார். குறிப்பாக, கேம்பிரிட்ஜ், ஆக்ஸஃபோர்டு, பாரிஸ், பொலோஞ்ஞா போன்ற பல்கலைக்கழக நகரங்களில் கார்மேல் சபை இல்லங்களை ஏற்படுத்தினார். கார்மேல் சபையை தியானயோக வாழ்விலிருந்து தர்மம் எடுத்து வாழும் சபையாக மாற்றினார். புனித சைமன் ஸ்டோக் விழா ஜூலை 16.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.