2014-07-18 17:06:20

திருத்தந்தை பிரான்சிஸ் - உறங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகை விழித்தெழச் செய்வது, துறவியரின் கடமை


ஜூலை,18,2014. பல வழிகளிலும் உறங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகை விழித்தெழச் செய்வது, அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள இருபால் துறவியரின் கடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் துறவியர் கருத்தரங்கு ஒன்றில் நினைவுறுத்தினார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில், இவ்வியாழனன்று இருபால் துறவியர் சபைகளின் தலைவர்கள் மேற்கொண்ட ஒரு கருத்தரங்கில், அர்ப்பண வாழ்வு மற்றும் மறைப்பணி அவைகளின் திருப்பேராயத் தலைவர், கர்தினால் João Braz de Aviz அவர்கள், துவக்க உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டுள்ள இவ்வுலகம், இறைவன் தேவையில்லை என்ற அளவு சக்தி பெற்றுள்ளதைப் போல் வாழ்வது ஆபத்தான ஒரு போக்கு என்று கூறிய கர்தினால் Braz de Aviz அவர்கள், இந்தப் போக்கினால் ஏனைய மனித உறவுகளும் தேவையில்லை என்ற ஆபத்து உருவாகின்றது என்று கூறினார்.
இன்றைய உலகில், நன்னெறியுடன் வாழ்வது மட்டும் போதாது, அதையும் தாண்டி, ஆன்மீக விழுமியங்களை உலகில் நிலைநாட்டுவது துறவியரின் கடமை என்று கர்தினால் Braz de Aviz அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.