2014-07-18 17:07:24

இஸ்லாமிய விழாவுக்கு திருப்பீட அவையின் வாழ்த்துச் செய்தி : இணக்க வாழ்வின் ஆதாரமாக மதங்கள் ஒன்றிணைந்து செயல்படமுடியும்


ஜூலை,18,2014. சமூகம் முழுமைக்கும் பயன்தரும் வகையில், இணக்க வாழ்வின் ஆதாரமாக மதங்கள் ஒன்றிணைந்து செயல்படமுடியும் என்பதை காட்டவேண்டிய நேரம் வந்துள்ளது என இஸ்லாமிய Id al-Fitr விழாவுக்கு வழங்கிய செய்தியில் கூறியுள்ளது மதங்களிடையே உரையாடலை ஊக்குவிக்கும் திருப்பீட அவை.
கடந்த மாதம் 28ம் தேதி துவக்கப்பட்டு இம்மாதம் 28ல் நிறைவுறும் இரமதான் நோன்பு மாதத்தைத் தொடர்ந்து இடம்பெறும் Id al-Fitr விழாவுக்கு இத்திருப்பீட அவை வெள்ளிக்கிழமையன்று உலகிலுள்ள இஸ்லாமியர் அனைவருக்கும் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளது
பொது மதிப்பீடுகளைக் கொண்டுள்ள நாம், நம் உண்மையான சகோதரத்துவ உணர்வுகளால் பலப்படுத்தப்பட்டு, நீதி அமைதி, மனித உரிமை மதிக்கப்படல், மனித மாண்பு போன்றவைகளுக்காக உழைக்கவேண்டிய அழைப்பைப் பெற்றுள்ளோம் என கர்தினால் Jean-Louis Tauranஆல் கையெழுத்திடப்பட்டுள்ள இச்செய்தி உரைக்கிறது.
பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவரும் இன்றைய உலகு நல்மனதுடையோர் அனைவரின் ஒருமைப்பாட்டையும் எதிர்பார்க்கிறது எனக் கூறும் இச்செய்தி, ஏழைகள், உதவித் தேவைப்படுவோர், நோயாளிகள், குடிபெயர்ந்தோர், அநாதைகள், மனித வியாபாரத்திற்கு உட்படுத்தப்பட்டோர், போதைப்பொருளுக்கு அடிமையானோர் ஆகியோரைப் பொறுத்தவரையில் மதங்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வையும் வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு வரும் அச்சுறுத்தல், உலக பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பற்ற நிலைகள், குடிபெயர்வுகளல் குடும்பங்கள் பிரிதல், போர்கள் போன்றவைகளை மனதில்கொண்டு, வருங்காலத்திற்கான நம்பிக்கைகளை மக்கள் இழக்காமல் இருக்கும்வகையில் மதங்கள் ஒன்றிணைந்து உழைக்கவேண்டிய அவசியத்தையும் மதங்களிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கும் திருப்பீட அவை, இஸ்லாமியர்களுக்கான தன் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.