2014-07-18 17:09:26

இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் கத்தோலிக்கப் பங்குக் கோவிலுக்கு அடுத்த கட்டிடம் தரைமட்டம்


ஜூலை,18,2014. இவ்வியாழனன்று இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காசா பகுதியில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பங்குக் கோவிலின் அடுத்த கட்டிடத்தை தரைமட்டமாக்கியது என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.
துயர் துடைப்புப் பணிகள் நடைபெறுவதற்காக காலை 10 மணிமுதல் 3 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாக்குதல்கள் மீண்டும் தொடர்ந்தபோது, இந்த ஆபத்தான தாக்குதல் நிகழ்ந்ததென்று அங்கு பணியாற்றும் அருள் சகோதரி Laudis அவர்கள் கூறினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கென, அன்னை தெரேசாவின் அருள் சகோதரிகள் நடத்திவரும் இல்லம் ஆபத்து சூழந்ததால், அங்கிருந்த சகோதரிகள், மாற்றுத் திறன் கொண்ட 28 குழந்தைகளுடனும், வயதான 9 பெண்களுடனும் பங்குக் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும், இவ்வியாழன் நடந்த தாக்குதலால் குழந்தைகளும் சகோதரிகளும் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்றும் அருள் சகோதரி Laudis கூறினார்.
அமைதியையும், பாதுகாப்பையும் வேண்டி, இவ்வியாழன் முதல் காசா பகுதியில் உள்ள பங்குக் கோவிலில் தொடர் நற்கருணை வழிபாடு மேற்கொள்ளப்படும் என்று எருசலேம் லத்தீன் வழிபாட்டு முறை ஆயர் இல்லத்தின் அறிக்கையொன்று கூறுகிறது.
இதுவரை இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் மேற்கொண்ட வரைமுறையற்ற தாக்குதல்களால் 227 பாலஸ்தீனியர் இறந்துள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பான்மையானோர் குடிமக்கள் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.