2014-07-18 17:03:23

இஸ்ரேல், பாலஸ்தீனத் தலைவர்களுடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்


ஜூலை,18,2014. இவ்வெள்ளி காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres அவர்களையும், பாலஸ்தீன அரசுத்தலைவர் Mahmoud Abbas அவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்று திருப்பீட செய்தித் தொடர்பாளர் கூறினார்.
காசா பகுதியில் ஏற்பட்டுள்ள தாக்குதல்கள் வெறுப்பை வளர்க்கும் ஆபத்தை உருவாக்கியுள்ளன என்றும், பேரளவில் மனிதாபிமான நெருக்கடியையும் இது உருவாக்கி வருகிறதென்றும் திருத்தந்தை அரசுத் தலைவர்களிடம் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று தான் மக்களிடம் விண்ணப்பித்தது போல, தன்னுடைய செபங்கள் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்காகத் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
மேலும், இவ்வியாழனன்று உக்ரைன் நாட்டில் எரிந்து வீழ்ந்த மலேசிய விமானத்தில் பலியானவர்களுக்குத் தன் செபங்களையும், பலியானவர் குடும்பங்களுக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
298 பேரைத் தாங்கிச்சென்ற மலேசிய விமானம் உக்ரைன் நாட்டில் விழுந்து நொறுங்கியதன் காரணத்தை ஊடகங்கள் பலவாறாகக் கணித்துவருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.