2014-07-17 15:35:42

வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் உதவ உத்திரவு வழங்கும் சட்டத்திற்கு பிரித்தானிய மதத் தலைவர்கள் எதிர்ப்பு


ஜூலை,17,2014. தீராத நோயினால் துன்புறுவோருக்கு அன்பும் ஆதரவும் தேவை; அதற்குப் பதிலாக, அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்று சொல்வது மிகவும் கொடுமை என்று Westminster பேராயர், கர்தினால் Vincent Nichols கூறியுள்ளார்.
தீராத நோயுற்றோர் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பினால், அவர்களுக்கு மருத்துவர்கள் உதவலாம் என்ற உத்திரவை வழங்கும் சட்டம் ஜூலை 18, இவ்வேள்ளியன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து, பிரிட்டனில் உள்ள 23 மதத்தலைவர்கள் இணைந்து தங்கள் எதிர்ப்பை வெளியிடும் வண்ணம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் Nichols, ஆங்கிலிக்கன் சபையின் தலைவர், Justin Welby, பிரித்தானிய யூத மக்களின் தலைவர், இஸ்லாமியத் தலைவர், சைன, சீக்கிய மதத்தலைவர்கள் என்ற பலரும் இணைந்து கையெழுத்திட்டுள்ள இந்த அறிக்கையில், இச்சட்டத்தைக் குறித்து வன்மையான கண்டனங்கள் கூறப்பட்டுள்ளன.
சமுதாயத்தில் வலுவிழந்தோர், குறிப்பாக, நோயுற்றோருக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் தரவேண்டிய அரசு, அவர்களை சமுதாயத்திலிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபடுவது, பிரித்தானிய கலாச்சாரத்தை அழிவுப் பாதையில் கொண்டு செல்லும் என்று மதத் தலைவர்களின் கண்டன அறிக்கை கூறுகிறது.
இந்தச் சட்டத்தைக் குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் வேளையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு சமூக அமைப்புக்கள் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / ICN








All the contents on this site are copyrighted ©.