2014-07-17 15:39:07

தொட்டில் இறுகி இறந்த சிறுமியின் கண்களால் இருவர் பார்வை பெற்றனர்


ஜூலை,17,2014. தருமபுரியில் தொட்டிலில் விளையாடியபோது திடீரென கழுத்து இறுகியதில் சிறுமி ஒருவர் இறந்தார். சோகத்திலும் அந்த சிறுமியின் தாயார் தன் மகளின் கண்களை தானம் கொடுத்துள்ளார்.
தருமபுரி, இளங்கோ நகரைச் சேர்ந்த வேடியம்மாள், தன் கணவரின் மறைவுக்குப் பிறகு, சில வீடுகளில் வேலைகள் செய்து தன் குழந்தைகளான மதுமிதா (14), மகாலட்சுமி (8), சக்திவேல் (4) ஆகியோரைக் காப்பாற்றி வந்தார்.
அரசு நடுநிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் மகாலட்சுமி, செவ்வாய் கிழமை மாலை பள்ளி முடித்து வீடுதிரும்பியவுடன், சிறுவன் சக்திவேலுவுக்காக வீட்டில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் ஏறி விளையாடியாடியபோது, தொட்டில் துணி சிறுமியின் கழுத்தை இறுக்கியுள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாததால், தொட்டிலிலேயே சிறுமியின் மூச்சு அடங்கியது.
சற்று நேரத்துக்குப் பிறகு வீடு திரும்பிய வேடியம்மாள் மகளின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் உதவியுடன் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாக கூறினர்.
கடந்த ஓராண்டுக்குள் கணவர், மாமனார் என இருவரையும் பறிகொடுத்த நிலையில் தன் மகளையும் இழந்த துக்கம் வேடியம்மாளை நிலைகுலையச் செய்தது. அச்சூழலிலும், மற்றவர்கள் யோசிக்கத் தயங்கும் முடிவை அந்த ஏழைத்தாய் வேடியம்மாள் எடுத்தார்.
அதாவது, தன் மகளின் கண்களை தானம் செய்ய விரும்புவதாக அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார். உடனே தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ‘தருமபுரி கண் தான மையம்’ அமைப்பின் செயலாளர் மருத்துவர் பாரிகுமார் ஆகியோர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
செவ்வாய் இரவு 10.30 மணியளவில் அகற்றப்பட்ட சிறுமி மகாலட்சுமியின் கண்கள், மருத்துவ பாதுகாப்புடன் பெங்களூர் எடுத்துச் செல்லப்பட்டு, பார்வையற்ற இருவருக்கு புதனன்று பொருத்தப்பட்டது.
சோகத்தை மனதோடு மறைத்துக் கொண்டு மகளின் கண்களை தானம் செய்ய முன்வந்த வேடியம்மாளை மருத்துவ துறையினரும், சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.