2014-07-17 15:39:35

கும்பகோணம் தீ விபத்தின் 10-ம் ஆண்டு நினைவு நாள்


ஜூலை,17,2014. 94 குழந்தைகளை பலி கொண்ட கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 10-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி குழந்தைகளை இழந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்தப் பள்ளியின் முன் புதன்கிழமை கூடி அஞ்சலி செலுத்தினர்.
கும்பகோணம் காசிராமன் தெருவில் மிகச் சிறிய கட்டிடத்தில் ஸ்ரீகிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி என 3 பள்ளிகள் இயங்கி வந்தன. இதில் 740-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர்.
2004, ஜூலை 16-ல் இந்தப் பள்ளியின் கீற்றுக் கொட்டகைகள் தீப்பற்றி எரிந்த விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக பலியாயினர். 18 குழந்தைகள் தீக்காயமடைந்தனர்.
இவ்விபத்தின் 10-ம் ஆண்டு நினைவு நாளான புதன்கிழமை, விபத்து நடந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் மற்றும் இப்பள்ளியில் படித்து உயிர் தப்பிய குழந்தைகள் காலை 9 மணியளவில் ஒன்று கூடினர்.
பள்ளி வாயிலின் மேல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற வாசகத்தை தாங்கிய பதாகையின் எதிரில் அமர்ந்து கண்ணீர்விட்டு அழுதபடி, மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினர், பின்னர் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று, பாலக்கரையில் உள்ள குழந்தைகளின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மாலையில், விபத்து நடந்த பள்ளியிலிருந்து ஊர்வலமாகச் சென்று குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய மகாமகக் குளத்தில் அகல் விளக்குகளை மிதக்க விட்டனர்.
“எங்கள் குழந்தைகளின் உயிர் பலிக்குப் பின்னர்தான் பள்ளிகளின் பாதுகாப்பும், சுகாதார நிலையும் மேம்பட்டுள்ளது. இந்தக் குழந்தைகளின் தியாகத்தால்தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை உலகமும், அடுத்த தலைமுறையினரும் அறியும் வகையில் இந்த நாளை (ஜூலை 16) சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்க வேண்டும்” என்கிறார் தனது மகன்கள் ஆனந்தராஜ், பிரவீன்ராஜ் ஆகியோரை இழந்த இன்பராஜ் என்கிற தந்தை.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.