2014-07-17 15:37:49

ஈராக்கில் கிறிஸ்தவம் வேரோடு அழிந்துபோகும் ஆபத்து உள்ளது - முதுபெரும் தந்தை Louis Raphael Sako


ஜூலை,17,2014. ஈராக்கில் நிலவிவரும் வன்முறைகள் தொடருமானால், அந்நாட்டில் கடந்த 2000 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ள கிறிஸ்தவம், வேரோடு அழிந்துபோகும் ஆபத்து உள்ளது என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் Louis Raphael Sako அவர்கள் கூறியுள்ளார்.
Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் அழைப்பின் பேரில், Brussels நகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள், தங்கள் எதிர்காலம் குறித்த அனைத்து நம்பிக்கையையும் இழந்துவருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
ஈராக்கில் சதாம் ஹுசெய்ன் அவர்கள் அரசுத் தலைவராக இருந்தபோது, மத உரிமையின்றி இருந்தோம், ஆனால், பாதுகாப்பை உணர்ந்தோம் என்று கூறிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தற்போது, மத உரிமை என்பது ஏட்டளவில் இருந்தாலும், பாதுகாப்பை முற்றிலும் இழந்துள்ளோம் என்று கூறினார்.
2003ம் ஆண்டு, ஈராக்கில் அமெரிக்க இராணுவம் படையெடுப்பதற்கு முன்னர், அங்கு 15 இலட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்த கிறிஸ்தவர்கள், அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு, தற்போது, 40,000ஆகக் குறைந்துள்ளனர் என்று ICN கத்தோலிக்கச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஈராக்கின் நெருக்கடி நிலைக் குறித்து ஆழ்ந்த விவாதங்களை ஐரோப்பிய ஒன்றியம் இப்புதனன்று மேற்கொண்டது என்றும் ICN செய்தி கூறுகிறது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.