2014-07-16 15:50:00

மத அடையாளங்களை அவமானப்படுத்துவது, மும்பை நகரின் கலாச்சாரத்தையே கேள்விக் குறியாக்குகிறது - கர்தினால் கிரேசியஸ்


ஜூலை,16,2014. பல்வேறு மதங்களையும், கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய மும்பை நகரில், மத அடையாளங்களை அவமானப்படுத்துவது இந்நகரின் கலாச்சாரத்தையே கேள்விக் குறியாக்குகிறது என்று மும்பை பேராயர், கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
மும்பை நகரின் Vile Parle பகுதியில் பல ஆண்டுகளாக மக்களின் வணக்கத்தைப் பெற்று வரும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திரு உருவக் கரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் இச்செவ்வாயன்று சேதப்படுத்தியைத் தொடர்ந்து, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
அப்பகுதியில் வாழும் கத்தோலிக்கர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இயேசுவின் கரங்கள் சேதமடைந்திருப்பது நமக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டுகிறது, அதாவது, நாம் உறவுக்காக கரங்களை நீட்டுமாறு இந்த நிகழ்வு நம்மைக் கேட்கிறது என்று கூறினார்.
1880ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாய் கூறப்படும் இந்தச் சிலுவை, கடந்த டிசம்பர் மாதமும் ஒரு முறை சேதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.