2014-07-16 15:13:27

ஜூலை 17,2014. புனிதரும் மனிதரே........ தொழுநோயாளர் மத்தியில் துறவு சபை அதிபர்


1838ம் ஆண்டு சனவரி 23ம் தேதி ஜெர்மனியின் ஹெப்பன் ஹைம் எனுமிடத்தில் பிறந்தார் மேரியன் கோப். இவருக்கு ஒரு வயதாக இருந்தபோதே, இவருடைய பெற்றோர், குடும்பத்தோடு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். தன் 24ம் வயதில் மேரியன் கோப், பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் இணைந்து ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, அத்துறவுசபை நிர்வாகக்குழு உறுப்பினராக, மருத்துவமனை நிர்வாகியாக, என பல்வேறு பொறுப்புகளை ஏற்று நடத்தியபின் 1883ல் அச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவ்வாண்டிலேயே, ஹவாய் தீவின் தொழுநோயாளிகளிடையே பணிபுரிய இச்சபைத் துறவியரை அனுப்புமாறு இவருக்கு ஹவாய் மன்னர் கல்லக்காவுவாவிடமிருந்து விண்ணப்பம் ஒன்று வந்தது. பிறரன்புப் பணிகளில் அதிக ஆர்வமுடைய மேரியன் கோப், தன்னோடு 6 சகோதரிகளை அழைத்துக்கொண்டு ஹவாய் சென்றார். அங்கு ஏற்கனவே புனித தமியான், தொழுநோயாளர்களிடையே பணிபுரிந்து வந்தார். தொழுநோயாளர்களுக்கான கக்காக்கோ மருத்துவமனை இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொழுநோயாளர்களின் பெண்குழந்தைகளுக்கென கப்பியோலானி குழந்தைகள் இல்லத்தையும் உருவாக்கினார் மேரியன் கோப். புனித தமியான் இறக்கும் தறுவாயில் இருந்தபோது அவரைப் பராமரித்ததுடன், அவர் 1889ம் ஆண்டு இறந்தபின், அவரின் பணிகளைத் தொடர்ந்தார் மேரியன் கோப். தொழுநோயாளரிடையே அயராது உழைத்த மேரியான் கோப், 1918ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் நாள் இறைபதம் சேர்ந்தார். இவர் பணிபுரிந்த தொழுநோயாளருக்கான இல்லத்திலேயே இவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேரியான் கோப்பை, 2005ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி அருளாளராகவும், 2012ம் ஆண்டு அக்டோபர் 21ம் நாள், புனிதராகவும் அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.