2014-07-16 15:49:22

செப்டம்பர் 28, ஞாயிறன்று முதிர்ந்த வயதோருடன் திருத்தந்தை மேற்கொள்ளும் சந்திப்பு


ஜூலை,16,2014. வயதில் முதிர்ந்தோருக்கு இவ்வுலகிலும், திருஅவையிலும் முக்கியமான இடம் உள்ளது என்பதை எடுத்துச் சொல்ல, முதிர்ந்த வயதோருடன் திருத்தந்தை ஒரு சந்திப்பை மேற்கொள்கிறார் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
வருகிற செப்டம்பர் 28, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வயது முதிர்ந்தோருடன் ஒரு சிறப்பு சந்திப்பை மேற்கொள்கிறார்.
இச்சந்திப்பைக் குறித்து பேசிய, திருப்பீட குடும்ப அவையின் உறுப்பினர், அருள் பணியாளர் Andrea Ciucci அவர்கள், இச்சந்திப்பைக் குறித்த விருப்பத்தை, திருத்தந்தையே முதலில் வெளியிட்டார் என்று கூறினார்.
செப்டம்பர் 28ம் தேதி காலை 9 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சி, காலை 10.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"நீண்ட ஆயுளின் ஆசீர்" என்ற மையக் கருத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள இத்தாலி, மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல்லாயிரம் முதியோர் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர் என்று அருள் பணியாளர் Ciucci அவர்கள் தெரிவித்தார்.
குடும்ப வாழ்வை மையப்படுத்தி, அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்கு தகுந்ததொரு தயாரிப்பாகவும், செப்டம்பர் மாதத்தில் பல்வேறு நாடுகளில் தாத்தா, பாட்டி நாள் கடைபிடிக்கப்படுவதைக் கொண்டாடவும் இந்தச் சந்திப்பு நாள் செப்டம்பர் 28ம் தேதியன்று நடத்தப்படுகிறது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.