2014-07-16 15:48:32

கர்தினால் பியெத்ரொ பரோலின் - குவாதலூப்பே மரியா, பயணம் செய்யும் திருஅவைக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டு


ஜூலை,16,2014. "அருள் நிறைந்த மரியே வாழ்க" என்ற வார்த்தைகள் மெக்சிகோவின் குவாதலூப்பே (Guadalupe) பசிலிக்காவில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் முறை ஒலிக்கும் வார்த்தைகள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
“மனிதகுல குடிபெயர்வும், வளர்ச்சியும்” என்ற தலைப்பில் ஜூலை 14, 15 ஆகிய நாட்கள், மெக்சிகோவில் நடைபெற்ற கருத்தரங்கின் இறுதியில் குவாதலூப்பே அன்னை மரியா திருத்தல பசிலிக்காவில் திருப்பலியாற்றிய திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
அன்னை மரியா, எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வை மையப்படுத்தி வழங்கிய மறையுரையில், மரியா, எலிசபெத் ஆகிய இரு பெண்கள் சந்தித்தபோது பரிமாறிக்கொண்ட வார்த்தைகள், கத்தோலிக்கத் திருஅவையில் மிகவும் புகழ்பெற்ற செபங்களாக தொடர்ந்து ஒலித்து வருகின்றன என்று கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.
குவாதலூப்பே மரியா, பயணம் செய்யும் திருஅவைக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்த உலகப் பயணத்தில் நம்முடன் பயணிக்கும் குடிபெயர்ந்தோர் மீது நாம் தனிப்பட்ட அக்கறை கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.