2014-07-16 14:25:16

அமைதி ஆர்வலர்கள் : Robert Cecil, 1937ல் நொபெல் அமைதி விருது பெற்றவர்


ஜூலை,16,2014. மனிதரின் ஆன்மீக இயல்பை ஒருவர் புறக்கணித்தாலோ அல்லது அந்த இயல்பை அழித்தாலோ அவர் எல்லா உண்மையும் நீதியும் சுதந்திரமும் நிலைகொள்ளும் அடித்தளத்தை அழிக்கிறார். இவ்வாறு சொன்னவர் 1937ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Edgar Algernon Robert Gascoyne Cecil. பிரபு இராபர்ட் செசில் என பொதுவாக அறியப்படும் இவர், 1953ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய இறுதி உரையில் இவ்வாறு கூறினார். மனிதரின் ஆன்மீக இயல்பு என்று எதுவும் இல்லை, அப்படி இருந்தால் அது புறக்கணிக்கப்பட வேண்டும் அல்லது அது விரைவில் அழிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு அக்காலத்தில் இரஷ்யாவிலும், சோவியத் யூனியன் பகுதிகளிலும் பெருமளவாகப் பரவியிருந்தது. இது, அறிவியலும் மனித இயல்பும் பற்றிய Karl Marx, Friedrich Engels ஆகியோரின் மெய்யியல் கோட்பாட்டின் அடிப்படையில் எழுந்ததாகும். இக்கோட்பாடு குறித்து எச்சரித்து உரையாற்றிய பிரபு இராபர்ட் செசில் அவர்கள், அனைத்துலக அளவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு திட்டமும் கிறிஸ்தவக் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைய வேண்டும், பிரிட்டனில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வளர்ச்சி நடவடிக்கைக்கும், அரசர் ஆல்பிரட் தொடங்கி இக்காலம் வரை கிறிஸ்தவக் கலாச்சாரமே காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறினார். கிறிஸ்தவக் கலாச்சாரமே, உலகாயுத, பொருளியப் போக்கின் முரண்பாட்டு விவாதங்களுக்கு உண்மையான மாற்றாக இருக்க முடியும். பொருளியக் கோட்பாட்டில் மாற்றம் கொண்டுவரப்படாதவரை உலகில் எந்தவித நிலையான அமைதியையும் நாம் பெற முடியும் என்று எனக்குத் தெரியவில்லை என்றும் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் பிரபு இராபர்ட் செசில்.
1937ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற பிரபு இராபர்ட் செசில் அவர்கள், 1924ம் ஆண்டில் வுட்ரூ வில்சன் அமைதி அமைப்பின் விருதையும் பெற்றார். மேலும், எடின்பர்க், ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், மான்செஸ்டர், லிவர்ஃபூல், செயின்ட் ஆன்டரூஸ், அபெர்டீன், பிரின்ஸ்டன், கொலம்பியா, ஏத்தென்ஸ் ஆகிய பல்கலைக்கழகங்களின் கவுரவ விருதுகளையும் பெற்றுள்ளார். பிரிட்டனின் இலண்டனில் 1864ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி பிறந்த பிரபு இராபர்ட் செசில், அரச குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை மூன்று தடவை பிரதமராகப் பணியாற்றியவர். மொத்தத்தில் இவரது குடும்பத்தினர் நான்கு தடவைகள் பிரிட்டனின் பிரதமர்களாகப் பணியாற்றியுள்ளனர். இராபர்ட் செசில், தனது 13வது வயதுவரை வீட்டிலே கல்வி கற்றார். பின்னர் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று, விவாதங்கள் நடத்துவதில் புகழடைந்தார். 1887ம் ஆண்டில் வழக்கறிஞர் கழகத்தில் இணைந்தார். 1889ம் ஆண்டில் Eleanor Lambton என்ற பெண்ணை மணந்தார். இவரைத் திருமணம் செய்துகொண்டது தனது வாழ்வில் தான் செய்த மிகத் திறமையான செயல் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார் பிரபு இராபர்ட் செசில். வழக்கறிஞராகவும் பணியாற்றிய இவர், வணிகச் சட்டக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் புத்தகம் வெளியாவதற்கு சிறப்பான ஒத்துழைப்பை நல்கினார். 1906ம் ஆண்டில் பிரித்தானிய கான்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் கிழக்கு மேரிலெபோன் பகுதிக்கென நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரபு இராபர்ட் செசில் அவர்களுக்கு, கட்டுப்பாடற்ற வணிகத்தில் உறுதியான நம்பிக்கை உண்டு. எனவே இவர் அந்நாட்டில் Joseph Chamberlain என்பவரால் அழுத்தம் கொடுக்கப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி குறித்த சீர்திருத்தங்களை எதிர்த்தார். இவை, செல்வந்தர்களுக்காக அரசின் உதவியோடு செய்யப்படும் பேரரசு ஆட்சிமுறைக் கோட்பாடு என்று சுட்டிக்காட்டினார் செசில். 1908ம் ஆண்டில் இராபர்ட் செசில் கட்டுப்பாடற்ற வணிகச் சங்கத் தலைவர் ஆர்தர் எலியட்டுக்கு எழுதிய மடலில், அச்சங்கத்திற்குள்ளே கட்டுப்பாடற்ற வணிகக் கோட்பாட்டைக் காப்பது குறித்து விளக்கினார். கட்டுப்பாடற்ற வணிக அமைப்புமுறையைத் தாக்குவது, அந்நாட்டின் கட்டுப்பாடற்ற வணிகத்தை அல்லது சமயக்கல்வி, பிரித்தானிய நாடாளுமன்றம், கட்டுப்பாடற்ற வணிகச் சங்கம் போன்ற சம முக்கியத்துவம் கொண்டவைகளுக்கு ஆபத்தாக அமையும் என தனது மடலில் எச்சரித்தார். Chamberlainக்கு, 1910ம் ஆண்டில் இவரும், இவரது சகோதரரும் சேர்ந்து அனுப்பிய கடிதத்தில், அடுத்து வருகின்ற தேர்தலில் உணவு வரிகளுக்குப் பரிந்துரை செய்யும் நடவடிக்கையைத் தள்ளிப்போடுமாறு கேட்டிருந்தனர். இறக்குமதி ஏற்றுமதி குறித்த இந்தச் சீர்திருத்த விவகாரத்தால் 1910ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் இராபர்ட் செசில் போட்டியிடவில்லை. எனினும் இவர் அதற்கு அடுத்த ஆண்டில் நடந்த ஹிச்சின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, 1923ம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
முதல் உலகப் போர் தொடங்கியபோது பிரபு இராபர்ட் செசிலுக்கு ஐம்பது வயது ஆகியிருந்ததால் அவரால் இராணுவத்தில் சேர்ந்து பணி செய்ய இயலவில்லை. அதனால் செஞ்சிலுவை சங்கத்தில் தொண்டாற்றினார். 1915ம் ஆண்டில் கூட்டணி அரசு உருவாகியதால், இவர் நாடாளுமன்ற வெளியுறவு விவகார நேரடிப் பொதுச் செயலரானார். ஏறக்குறைய நான்காண்டுகள் ஆற்றிய இப்பணியில், எதிரிகளுக்கு எதிராக, பொருளாதார மற்றும் வணிகத் தடைகள் கொண்டுவரப்படுவதற்கு முயற்சிகள் தொடங்கப்பட இவரே காரணமானார். வருங்காலத்தில் போர்களைக் குறைப்பதற்கென பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை எழுதி 1916ம் ஆண்டு செப்டம்பரில் அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்தார் செசில். போர்கள் ஏற்படுத்தும் துன்பங்களையும், அழிவுகளையும் கோடிட்டுக் காட்டி, அவை ஐரோப்பிய கலாச்சாரத்துக்கும் போருக்குப் பின்னான விவாதங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்தார். ஜெர்மனியின் இராணுவத் தாக்குதல் போக்கை அழிப்பதுவோ அல்லது போருக்குப்பின் பிரச்சனைகளைத் தீர்ப்பதுவோ அமைதிக்கு உறுதி அளிக்காது என்று சொல்லி, அனைத்து நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, போரைத் தவிர்த்து வேறு வழிகளைக் கையாளுமாறு இவர் வலியுறுத்தினார். நாடுகள் நடுநிலை வகிக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதை விடுத்து, கருத்தரங்குகள் முறைப்படி நடத்தப்படுவதை வரவேற்றார். மோதல்கள் தொடங்குவதற்கு முன்னரே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அமைதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளை ஆதரித்தார். நாடுகள் அமைதி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அவற்றை வலியுறுத்தும் நோக்கத்தில் அந்நாடுகளுக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படுவது அவசியம் என்று செசில் கூறினார்.
வருங்காலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்குப் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை எழுதி, அதை 1917ம் ஆண்டு மே மாதத்தில், நாடுகளின் கையெழுத்துக்குச் சமர்ப்பித்தார். அதில் கையெழுத்திடும் நாடுகள், போர் முடிந்த காலத்துக்குப்பின் இடம்பெறும் நிலப்பகுதி தீர்வுகளை ஐந்து ஆண்டுகளுக்குக் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். நிலப்பகுதியில் மாற்றம் தேவைப்பட்டால், கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து அம்மாற்றங்களைக் கொண்டுவரலாம் எனவும், அனைத்துலக அளவிலான பிரச்சனைகளை நாடுகள் கருத்தரங்கில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அப்பிரச்சனைகள் குறித்து கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக நாடுகள் செயல்படக் கூடாது எனவும் செசில் அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். கருத்தரங்கில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு இவ்வறிக்கையில் கையெழுத்திடும் நாடுகள் அனைத்தும் கட்டுப்பட வேண்டுமெனவும் செசில் கூறினார். மேலும், 1918ம் ஆண்டில் அனைத்து நாடுகளின் கூட்டமைப்புக்கு அவர் சமர்ப்பித்த பரிந்துரைகளில், ஒரு நாடு தன்னிச்சையாகப் போரை ஆரம்பித்தால், அவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் அனைத்தும் தங்களின் பொருளாதார மற்றும் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி அந்நாட்டை போரிலிருந்து தோற்கடிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
1918ம் ஆண்டு நவம்பரில் செசில் அனைத்து நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவு அலுவலகத் தலைவராக நியமிக்கப்பட்டார். அனைத்து நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதில், மற்றவர்கள் செயல்பட்டதைவிட இராபர்ட் செசில் வகித்த பங்கு சிறப்பானது என, வரலாற்று ஆசிரியர் ஜார்ஜ் எகெர்டன் எழுதியுள்ளார். Versailles அமைதி உடன்படிக்கை ஜெர்மனிக்குச் சமர்ப்பிக்கப்பட்டபோது, அது ஜெர்மனிமீது திணிக்கும் கடும் கட்டுப்பாடுகள் குறைவாக இருக்க வேண்டும், அப்படிச் செய்தால்தான் ஜெர்மனியால் அனைத்து நாடுகள் கூட்டமைப்பில் இணைய முடியும் என்று செசில் விவாதித்தார். அனைத்து நாடுகள் கூட்டமைப்பு உருவாக பல ஆண்டுகள் உழைத்த பின்னர் அவர் பிரிட்டன் திரும்பி, அனைத்து நாடுகள் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை ஆர்வமுடன் திட்டமிட்டார். அவர் தனது பொது வாழ்வை இந்தக் கூட்டமைப்புக்கே முற்றிலும் செலவிட்டார். இந்தக் கூட்டமைப்பில் மொழிப் பிரச்சனை ஏற்பட்டபோது, 1921ம் ஆண்டில் எஸ்பிராந்த் மொழியை அதன் அதிகாரப்பூர்வ மொழியாக வைப்பதற்குப் பரிந்துரை செய்தார். 1923ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு ஐந்து வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து நாடுகள் கூட்டமைப்புப் பற்றி அமெரிக்கர்களுக்கு எடுத்துச் சொன்னார்.
முதல் உலகப் போர், ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கை அசைத்துவிட்டதோடு அவர்களின் மறைவுக்கும் காரணமாக இருந்ததைக் கண்ட இராபர்ட் செசில், கிறிஸ்தவ நெறிப்படி ஐரோப்பிய வாழ்வுமுறையை கட்டியெழுப்ப விரும்பினார். அனைத்து நாடுகள் கூட்டமைப்பின் பணி, போரைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அதன் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றிலும் அவற்றின் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதுமாகும் என்று கூறினார். 1923ம் ஆண்டு மே 25ம் தேதி பிரபு இராபர்ட் செசில், மீண்டும் பிரித்தானிய அமைச்சரவையில் இணைந்தார். தனது வாழ்வில் பல விருதுகளைப் பெற்றுள்ள பிரபு இராபர்ட் செசில், 1958ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி தனது 87வது வயதில் காலமானார். இவருக்குப் பிறகு இவரது பரம்பரையில் பிரபு என்ற பட்டம் என்பது இல்லாமல் போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.