2014-07-15 15:00:22

விவிலியத்
தேடல் மினா நாணய உவமை பகுதி - 7


RealAudioMP3 மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும்தாலந்து உவமையையும், லூக்கா நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளமினா நாணய உவமையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 'தாலந்துகள்' அல்லது 'திறமைகள்' என்பதை இருவேறு கண்ணோட்டங்களில் நம்மால் பார்க்கமுடியும். இவ்விரு கண்ணோட்டங்களில் நமது தேடலை அடுத்தவாரம் தொடர்வோம் என்று சென்றவாரத் தேடலை நிறைவு செய்தோம். இன்று தொடர்கிறோம்.
ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள திறமையைக் குறிக்க, ஆங்கிலத்தில் நாம் 'Talent' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். இந்த வார்த்தை, 'தாலந்து உவமை'யிலிருந்து பிறந்தது என்பது தெளிவான உண்மை. நம்மிடம் வழங்கப்பட்டுள்ள தாலந்துகளை, திறமைகளைக் குறித்து இன்றைய நம் தேடலில் சிந்திப்போம்.

மத்தேயு நற்செய்தி 25ம் பிரிவில் நாம் வாசிக்கும் 'தாலந்து உவமை'யில் மூவரிடம் தாலந்துகள் தரப்படுகின்றன. ஒருவருக்கு ஐந்து, மற்றொருவருக்கு இரண்டு மூன்றாம் ஆளுக்கு ஒன்று என்று 'அவரவர் திறமைகளுக்கு ஏற்ப' (மத். 25:15) பிரித்துத் தரப்படுகின்றன. லூக்கா நற்செய்தியில் பத்து பேருக்கு பொதுவாக வழங்கப்பட்ட பத்து மினா நாணயங்களை அவர்கள் ஆளுக்கொரு நாணயமாகப் பிரித்துக்கொண்டனர் (லூக். 19:13).
ஒவ்வொருவருக்கும் சமமான திறமைகள், வாய்ப்புக்கள் வழங்கப்படுவதை லூக்கா நற்செய்தியில் கேட்கும்போது மனதுக்குத் திருப்தியாக உள்ளது. ஆனால், இது நடைமுறை வாழ்வில் நாம் காணும் எதார்த்தம் அல்ல என்றும் நம் மனம் சொல்கிறது. வாழ்வில் நாம் அடிக்கடி சந்திக்கும் எதார்த்தத்தை மத்தேயு நற்செய்தி சொல்வதுபோல் தெரிகிறது.
ஒரே குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், அவர்கள் மத்தியில் பல வகையான திறமைகள், வெவ்வேறு அளவில் உள்ளன. நம்மில் பலர், மற்றவர்களிடம் இருக்கும் திறமைகளை, அவர்கள் பெறும் கூடுதலான வாய்ப்புக்களை எண்ணி, எண்ணி, மனம் வெந்து வாழ்கிறோம். நம்மிடம் உள்ளத் திறமைகளை விட, அடுத்தவர்களிடம் அதிகமாக உள்ள திறமைகளே நம் கண்ணையும், கருத்தையும் நிறைக்கின்றன. இந்தக் கண்ணோட்டத்தில் காணும்போது, மத்தேயு நற்செய்தி சொல்லும் 'தாலந்து உவமை' உலக எதார்த்தத்தைச் சித்திரிப்பது போல் தெரிகிறது.
ஆனால், இன்னும் சிறிது ஆழமாகச் சிந்தித்தால், லூக்கா நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளதும் உண்மையென்பதை, உணரமுடியும். அதாவது, அனைவருக்கும் திறமைகள் சமமாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளன என்பதும் உண்மையென்பதை நாம் உணர முடியும். 'திறமைகள்' என்ற சொல்லை அறிவுத் திறமை, கலைத் திறமை, விளையாட்டுத் திறமை என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் பார்க்காமல், திறமை என்பதை ஒரு பரந்துபட்ட கோணத்தில் பார்த்தால், நம் அனைவருக்குமே பலவகைத் திறமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வோம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு வகையில் திறமை பெற்றவர்கள் என்பதை எடுத்துச்சொல்ல நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு கதையை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
இலக்கியங்களைக் கரைத்துக் குடித்திருந்த ஓர் அறிவியல் மேதை, ஒருநாள் படகிலேறி ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். படகோட்டியிடம், "உனக்குக் கம்பராமாயணம் தெரியுமா?" என்று கேட்க, படகோட்டி "தெரியாது, ஐயா" என்றார். "சே! உன் வாழ்வில் பாதியை நீ இழந்துவிட்டாயே!" என்று அறிவாளி வருத்தப்பட்டார். ஆற்றில் சிறிது தூரம் சென்றபின், மீண்டும் அந்த மேதை படகோட்டியிடம், "சரி, உனக்கு ஏதாவது ஒரு திருக்குறள் சொல்லத் தெரியுமா?" என்று கேட்டார். படகோட்டி, தலை குனிந்து, "தெரியாது, ஐயா" என்று முணுமுணுத்தார். அறிவாளி அவரிடம், "உன் வாழ்வின் பெரும்பகுதியை நீ இழந்துவிட்டாய்!" என்று கூறினார்.
அவ்வேளையில் படகு நடு ஆற்றில் ஒரு சுழலில் சிக்கியது. அப்போது படகோட்டி அறிவாளியிடம், "ஐயா! உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" என்று கேட்க, அறிவாளி, "தெரியாது!" என்று சொன்னார். "அப்படியானால், நீங்கள் இப்போது உங்கள் முழு வாழ்வையும் இழந்துவிட்டீர்கள்" என்று சொல்லிவிட்டு, தண்ணீரில் குதித்து நீந்திச் சென்றார் என்று கதை முடிகிறது. ஒருவேளை அந்தப் படகோட்டி அறிவாளியையும் தன் முதுகில் சுமந்தபடி நீந்திச் சென்று அவரைக் காப்பாற்றியிருப்பார் என்பது என் கதையின் முடிவு.

திறமைகள் பலவகை. வெளிப்படையாக, பலரையும் பிரமிக்க வைக்கும் வண்ணம் காட்டப்படும் திறமைகளையே நாம் பெரும்பாலும் 'திறமைகள்' என்று முத்திரை குத்துகிறோம். பலரின் கவனத்தையும், பாராட்டையும் ஒருவர் பெறும்போது, அவரைத் 'திறமை மிக்கவர்' என்று சான்றிதழ் வழங்குகிறோம். ஆனால், அத்திறமையை வளர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகளை பெரும்பாலான நேரங்களில் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. "உன்னுடைய தாலந்து இறைவன் உனக்குத் தரும் பரிசு. அதைக் கொண்டு நீ என்ன செய்கிறாய் என்பது, நீ இறைவனுக்குத் தரும் பரிசு" (Your talent is God's gift to you. What you do with it is your gift back to God.) என்று புகழ்பெற்ற பேராசிரியர் Leo Buscaglia அவர்கள் சொன்னது இப்போது என் நினைவுக்கு வருகிறது.

ஒருவர் 'திறமை மிக்கவர்' என்று சொல்லும்போது, இறைவன் அவருக்கு அத்திறமையை ஒரு முழுமையான பரிசாக பிறப்பிலேயே வழங்கிவிட்டார் என்ற பாணியில் சிந்திப்பது ஆபத்து. இறைவன் தருவதெல்லாம் ஆரம்பங்களே! இதை விளக்கும் ஓர் உவமை, இதோ:
உலகமென்ற சந்தையில், மிக உயர்ந்த, உன்னதமான பொருள்களை வாங்க அங்கு வந்தார் ஓர் இளம்பெண். அச்சந்தையில் "இறைவனின் பழக்கடை" என்ற விளம்பரப் பலகையைக் கண்டதும் அவருக்கு அளவுகடந்த ஆனந்தம். தான் விரும்பும் தலை சிறந்த பழங்கள் அக்கடையில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே சென்றார். அங்கு அவர் கடவுளிடம், "இறைவா, எனக்கு தலை சிறந்த ஆப்பிள், மிகச் சுவையான ஆரஞ்சு, ஒப்பற்ற மாம்பழம் எல்லாம் வேண்டும்" என்று தன் பட்டியலைக் கூறினார். கடவுள் அவரிடம் ஒரு சிறிய பொட்டலத்தை மடித்துக் கொடுத்தார். தான் சொன்னதை இறைவன் புரிந்துகொள்ளவில்லையோ என்ற சந்தேகத்துடன் அப்பெண் கடவுளைப் பார்த்தார். கடவுள் அப்பெண்ணிடம், "நீங்கள் எதிர்பார்க்கும் பழங்கள் இங்கில்லை. என்னிடம் உள்ளதெல்லாம் விதைகளே" என்று கூறினார்.
இறைவன் நம் வாழ்வில் தருவதெல்லாம், விதைகளே, ஆரம்பங்களே! கனிதரும் வகையில் அவற்றை வளர்ப்பதும், கருவிலேயே வாடிப் போகச் செய்வதும் நம் பொறுப்பு!

வாழ்வில் நம்மை வந்தடையும் ஒவ்வொரு பொறுப்பிற்கும் நாம் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்ற முக்கியமான உண்மையை நமக்குச் சொல்லித் தருகிறது, நாம் சிந்தித்துவரும் 'மினா நாணய உவமை'. கணக்கைப் பற்றி பேசும்போது, நாம் தமிழில் பயன்படுத்தும் 'கணக்கு வழக்கு' என்ற சொற்றொடர் நினைவுக்கு வருகிறது. நமது வரவு செலவு கணக்கு சரியாக இருந்தால், அங்கு வழக்கு தேவையில்லை. எப்போது கணக்கு சரிவர அமையாமல் இருக்கிறதோ, அங்கு கணக்கை விட வழக்கு அதிகமாகிவிடும். மினா நாணய உவமையில் நாம் சந்திக்கும் மூன்றாவது பணியாளர் தன் கணக்கை ஒப்படைக்க வந்ததும், அங்கு கணக்கிற்குப் பதிலாக வழக்கே நடைபெறுகிறது.
நாணயங்களைப் பெற்ற பணியாளர்கள் கணக்கு கொடுக்க வரும்போது, அவர்கள் சொல்லும் கூற்றுகள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. கொடுக்கப்பட்ட நாணயத்தை பத்து மடங்காகவும், ஐந்து மடங்காகவும் பெருக்கியவர்கள், தங்களுக்குத் தரப்பட்ட கொடைகளைப் பற்றிப் பேசுகின்றனர். அக்கொடைகளைப் பலுகச் செய்ததால் தங்களுக்கு உண்டான மகிழ்வைக் கூறுகின்றனர். மூன்றாவதாக வந்த பணியாளரோ, தனக்கு அளிக்கப்பட்ட கொடையைப் பற்றி பேசவில்லை. மாறாக, அந்தக் கொடையைத் தந்தவரைப் பற்றி குறை கூறுகிறார்:
வேறொருவர் வந்து, “ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்என்றார். (லூக்கா 19: 20-21)

மூன்றாவது பணியாள் தான் செய்யத் தவறிய கடமையை மறைக்க, தன் தலைவரைக் குற்றம் சொல்லி, தப்பிக்க நினைத்தார். ஆனால், அவரது சொற்களைக் கொண்டே, தலைவர் அவருக்குத் தீர்ப்பு வழங்குகிறார்.
அதற்கு உயர் குடிமகன் அவரிடம், 'பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே' என்றார். (லூக்கா 19: 22-23)

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அங்கு நடந்ததாக இயேசு விவரிக்கும் ஒரு நிகழ்வு நமது சிந்தனைகளுக்குச் சவாலாக அமைகின்றது. என்னைப் பொருத்தவரை, நற்செய்தியில் நான் சந்தித்துள்ள மிகப்பெரிய சவால் இது என்றே சொல்லவேண்டும். நம் சிந்தனைக்கு சவால் விடுக்கும் இந்நிகழ்வையும், குறிப்பாக, 'உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' (லூக்கா 19: 26) என்று உயர் குடிமகன் சொன்ன புதிரான வார்த்தைகளின் பொருளையும் நமது அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.