2014-07-15 15:00:05

புனிதரும் மனிதரே - கார்மேல் அன்னையின் நினைவால் உலக அமைதி இயக்கம்


புனிதர்கள் குடும்பத்தின் அன்னையாக, அணிகலனாகத் திகழ்பவர், அன்னை மரியா. உலகின் பல நாடுகளில், இவர் காட்சி அளித்த ஊர்களைக் கொண்டு, மரியன்னைக்குப் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. லூர்து அன்னை, பாத்திமா அன்னை, வேளாங்கண்ணி மாதா, குவாதலூப்பே மரியா என்ற பல பெயர்களால் இவர் அழைக்கப்படுகிறார். இவ்வரிசையில், மரியன்னைக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு சிறப்புப் பெயர் கார்மேல் அன்னை.
பழைய ஏற்பாட்டு காலம் முதல், (1 அரசர்கள் 18:19) கிறிஸ்தவ பாரம்பரியத்துடன் இணைந்த ஒரு மலை, கார்மேல் மலை. அம்மலையின் பெயரால், கார்மேல் அன்னை என்று அழைக்கப்படும் மரியன்னையின் திருநாள், ஜூலை 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. மரியன்னையின் திருநாட்கள் வெறும் கொண்டாட்டங்கள் என்ற அளவில் நின்றுவிடக் கூடாது, அதைத் தாண்டி, அர்த்தமுள்ள மாற்றங்களை இவ்வுலகிற்குக் கொணரவேண்டும் என்பதை கார்மேல் அன்னையின் திருநாள் நமக்குச் சொல்லித் தருகிறது.
இரண்டாம் உலகப் போர், உலகின் பல நாடுகளை உருகுலையச் செய்த வேளையில், அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டை உருவாக்கியது. அணுகுண்டின் வலிமையைச் சோதிக்க விழைந்த அமெரிக்க அரசு, நியூ மெக்சிகோ மாநிலத்தின் பாலைவனப் பகுதியில், அலமொகோர்தோ (Alamogordo) என்ற இடத்தைச் சோதனைக் களமாகத் தேர்ந்தது. அவ்விடத்தில், 1945ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது.
கார்மேல் அன்னையின் திருநாளன்று அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதால், அப்பகுதியில் வாழ்ந்த மக்கள், போர்களுக்கு எதிரான ஓர் இயக்கத்தை உருவாக்கி, அதை, கார்மேல் அன்னையின் பாதுகாவலில் ஒப்படைத்தனர்.
அருள்பணியாளர் எம்மானுவேல் சார்ல்ஸ் மெக்கார்த்தி (Emmanuel Charles McCarthy) என்பவரின் முயற்சியால், அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பாலைவனப் பகுதியில், மன்னிப்பு, ஒப்புரவு, அமைதி ஆகிய கருத்துக்களை மையப்படுத்தி, 1990ம் ஆண்டு முதல், ஜூலை 16ம் தேதியன்று, ஒவ்வோர் ஆண்டும் முழுநாள் உண்ணா நோன்பு முயற்சிகளும், செபங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
கார்மேல் மலை, இன்று, இஸ்ரேல் நாட்டின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே மீண்டும் ஒருமுறை மோதல்கள் உருவாகியுள்ளன. இந்த மோதல்கள் முடிவுக்கு வர, கார்மேல் அன்னையின் துணையை, அவரதுத் திருநாளன்று நாடுகிறோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.