2014-07-14 16:03:22

விதைப்பவன் உவமை குறித்த திருத்தந்தையின் மூவேளை செப உரை


ஜூலை14,2014. இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் வந்த 'விதைப்பவன்' உவமை குறித்து தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ள நம் இதயங்கள் எத்தகைய தயார் நிலையில் உள்ளன என்ற கேள்வியை முன்வைத்தார்.
இறைவன் சோர்வடையாமல் நம் இதயங்களை நோக்கி தன் வார்த்தைகளையும் அன்பையும் வாரி இறைத்துக்கொண்டேயிருக்கிறார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவை நல்ல பலனைத் தர, நம் இதயங்கள் பண்படுத்தப்பட்டதாக எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றார்.
இறைவார்த்தைகளைப் பெறும் நாம், நம்மையே விதைப்பவர்களாக எண்ணி, நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தை எனும் விதைகள் குறித்து சிந்திப்போம் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வார்த்தைகள் பிறரைக் குணப்படுத்துகின்றனவா அல்லது காயப்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றார்.
இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட கடல் ஞாயிறு குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடலைச் சார்ந்து வாழும் மக்களுக்கும் குடும்பங்களுக்கும் ஆற்றவேண்டிய மேய்ப்புப்பணி அக்கறை குறித்தும் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.