2014-07-14 16:08:24

மத்தியக்கிழக்குப் பகுதியில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு


ஜூலை14,2014. மத்தியக்கிழக்குப் பகுதியில் அரசியல் தீர்வுக்கான தோல்விகளைத் தொடர்ந்து, அப்பாவி பொதுமக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, போர்நிறுத்த உடன்பாடு ஏற்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, Christian Aid என்ற பிறன்பு அமைப்பு.
இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே குறிப்பாக காசா பகுதியில் இடம்பெறும் கடும் மோதல்களில் அப்பாவி மக்களே உயிரிழந்து வருகிறார்கள் என்ற கவலையை வெளியிட்ட இந்தப் பிறரன்பு அமைப்பு, இரு பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தீவிரமாகியுள்ள இந்த மோதல்கள், பொது மக்களின் உடைமைகளையும் உயிர்களையுமே அதிகம் பாதித்துள்ளன எனபதையும் சுட்டிக்காட்டுகிறது.
காசா பகுதியிலிருந்து இஸ்ராயேல் நோக்கி வீசப்பட்ட சிறு ஏவுகனைகளால் இரு இஸ்ராயேல் இராணுவத்தினரும், ஒரு குடிமகனும் காயமுற்றுள்ள வேளையில், இம்மாதம் 7ம் தேதி முதல் இடம்பெற்றுவரும் இஸ்ராயேலின் தாக்குதலால் 22 குழந்தைகள் உட்பட 160 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாகவும், 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா.வின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
காசா பகுதியில் நடைபெற்றுவரும் தாக்குதல்களால் 342 வீடுகள் முற்றிலுமாக சேதமாக்கப்பட்டு ஏறத்தாழ 200பேர் குடிபெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Christian Aid








All the contents on this site are copyrighted ©.