2014-07-14 16:05:37

மத்தியக்கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ செபிக்குமாறு திருத்தந்தை விண்ணப்பம்


ஜூலை14,2014. புனித பூமியின் அமைதிக்காக செபிக்குமாறு தன் இதயத்தின் ஆழத்திலிருந்து விண்ணப்பம் ஒன்றை விடுப்பதாக இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் மாதம் 8ம் தேதி Ecumenical முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுடனும், இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களுடனும், தான் வத்திக்கானில் கலந்துகொண்ட அமைதிக்கான செப வழிபாடு பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த செபவழிபாடு பயனற்றதாகப் போய்விட்டது என சிலர் நினைத்தால் அது தவறு, ஏனெனில் நாம் தீமையால் வெல்லப்பட அனுமதிக்கப்படாமல் இருப்பதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் ஒப்புரவின் இடத்தை வன்முறையும் பகைமையும் கைப்பற்றாமல் இருப்பதற்கும் செபம் உதவுகிறது என்றார்.
மோதல்கள் கைவிடப்பட்டு அனைவரும் விரும்பும் அமைதி நிலவுவதற்கு உதவும் வகையில் செபத்தையும் அனைத்து முயற்சிகளையும் நாடுகளின் தலைவர்களும், இதில் தொடர்புடைய அனைத்து தலைவர்களும் மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதிக்காக செபிக்குமாறு அவர் விடுத்த இந்த அழைப்பின் இறுதியில் சிறிது நேரம் அமைதியாக மக்களுடன் இணைந்து செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'மீண்டும் போர் ஒருபோதும் வேண்டாம்' என மன உறுதியுடன் கூறுவதோடு, ஆயுதங்கள் அமைதியின் கருவிகளாக மாற்றப்படுவதற்கும், அச்சமும் பதட்ட நிலைகளும் நம்பிக்கை மற்றும் மன்னிப்பாக மாற்றப்படுவதற்கும் மக்கள் எழுப்பும் அழுகுரல்களுக்கு செவிமடுப்போம் எனவும் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.