2014-07-14 16:12:26

சூடானில் கிறிஸ்தவர்கள் பேராபத்தை எதிர்நோக்குவதாக உரைக்கிறார் தென்சூடான் ஆயர்


ஜூலை14,2014. சூடான் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு சட்ட வழிமுறையில் வழங்கப்படும் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளதால் அவர்கள் கடுமையான மனித உரிமை மீறல்களை சந்திக்கும் ஆபத்து இருப்பதாக தன் கவலையை வெளியிட்டுள்ளார் தென் சூடான் ஆயர் ஒருவர்.
2011ம் ஆண்டு ஜூலை மாதம் தென் சூடான் நாடு சூடானிலிருந்து பிரிந்ததிலிருந்து, சூடான் கிறிஸ்தவர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்தவர்கள் போல் வாழ்வதாக உரைத்த தென் சூடான் ஆயர் Eduardo Hiiboro Kussala அவர்கள், ஆயர்களும் அருட்பணியாளர்களும்கூட அனுமதியின்றி குடியேறியவர்கள் போல் வாழ்வதாக கவலையை வெளியிட்டார்.
மத வேறுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் உண்டென சூடான் அரசியலமைப்பு உறுதி வழங்குகின்ற போதிலும், நடைமுறையில் அது ஒருபோதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை எனவும் ஆயர் Kussala அவர்கள் கூறினார்.
சூடானின் முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களுக்கு வழிபாட்டு உரிமைகள் இருக்கின்ற போதிலும், சட்ட வழிமுறையில் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார் தென் சூடான் ஆயர் Kussala.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.