2014-07-14 16:14:34

இந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு


ஜூலை14,2014. கடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள் (விலங்கினங்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகம் தெரிவிக்கிறது.
இவற்றில் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கிழக்கு இமாயலப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டவை என்று அந்த ஆய்வகத்தின் இயக்குநர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினங்களில் (விலங்கினங்களில்) அதிகமானவை பூச்சிகளே என்று கூறும் வெங்கட்ராமன், இவற்றின் வாழ்விடங்களுக்கு, மனிதர்களால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக, அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகவும், கவலைக்குரியதாகவும் உள்ளன என்றும் தெரிவித்தார்.
உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வு மேலும் கூடுதலாக முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தும் அவர், அந்த நடவடிக்கை இல்லாதபோது, பல அரிய வகையான உயிரினங்கள் (விலங்கினங்கள்) முற்றாக அழிந்துபோகக்கூடிய ஆபத்து உள்ளது என்றும் கூறினார்.
நிலத்தில் வாழும் உயிரினங்களை (விலங்கினங்கள்)விட, நீரில் வாழ்பவை கூடுதலான அபாயங்களை எதிர்கொள்கின்றன எனவும் வெங்கட்ராமன் தெரிவித்தார்.
இந்தியாவில் உயிரினங்கள் (விலங்கினங்கள்) குறித்த கல்வியில் ஆர்வம் குறைந்து வருவது புதிய உயிரினங்களைக் கண்டறிவதில் பல இடையூறுகளை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கவலையை வெளியிட்டார்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.