2014-07-12 14:26:47

புனிதரும் மனிதரே வானதூதர் இறங்கிவந்து, நிலத்தை உழுத அற்புதம்


உழவர்களின் பாதுகாவலர் என்ற பெருமைக்குரியவர், புனித இசிதோர். 1070ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் மத்ரித் நகரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த இசிதோர், தன் வறுமையின் காரணமாக, சிறுவயது முதல் செல்வந்தர் ஒருவரது வயலில் உழைக்க வேண்டியிருந்தது.
நாள் தவறாமல் திருப்பலியில் கலந்துகொள்ளும் பழக்கம் கொண்டவர் இசிதோர். எனவே, இவர் நிலத்தில் உழைக்கச் செல்வதற்குத் தாமதமானது. இவர் மீது பொறாமை கொண்ட பிற ஊழியர்கள் இவர் வேலைக்குத் தாமதமாக வருவதை முதலாளியிடம் முறையிட்டனர். இசிதோர் மீது நன்மதிப்பு கொண்ட முதலாளி, இவர்கள் முறையீட்டை நம்ப மறுத்தார். எனவே, அவர்கள் முதலாளியைத் தங்களுடன் வயலுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஏற்கனவே, நிலத்தில் இசிதோர் செய்யவேண்டிய வேலைகள் அனைத்தும் நிறைவேறியிருந்தன. இதைக் கண்ட பிற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து நின்றனர். முதலாளியோ மகிழ்வுடன் வீடு திரும்பினார். உண்மையில் நடந்தது இதுதான்... இசிதோர் கோவிலில் திருப்பலி கண்டுகொண்டிருந்த வேளையில், அவருக்குப் பதிலாக ஒரு வானதூதர் நிலத்தில் உழுதுகொண்டிருந்தார். வானதூதர் உழுத நிலத்தில், ஒன்றுக்கு மூன்று மடங்கு கதிர்கள் விளைந்தன என்று சொல்லப்படுகிறது.
1130ம் ஆண்டு தன் 60வது வயதில் இறைவனடி சேர்ந்தார் இசிதோர். ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப் பிறகு, 1622ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி, திருத்தந்தை 15ம் கிரகரி அவர்கள், புனித லொயோலா இஞ்ஞாசியார், புனித பிரான்சிஸ் சேவியர், புனித அவிலா தெரசா, புனித பிலிப் நேரி ஆகிய நான்கு புகழ்பெற்ற துறவியரோடு, ஏழை உழவரான இசிதோர் அவர்களையும் புனிதராக உயர்த்தினார். உழவர்களின் பாதுகாவலர் என்ற பெருமை, புனித இசிதோருக்கு வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானதே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.