2014-07-12 15:18:42

ஆயுதக்களைவு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்குமாறு மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆயர்கள் வலியுறுத்தல்


ஜூலை,12,2014. போரிடும் குழுக்கள் அப்பாவி குடிமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டுமெனச் சொல்லி, ஆயுதக்களைவு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளனர் மத்திய ஆப்ரிக்கக் குடியரசு ஆயர்கள்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆயுதங்களைக் கைவிட்டு பொது சமுதாயத்துடன் ஒன்றிணையும் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டுமென்ற ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானங்கள் அமல்படுத்தப்படாமல் இருப்பது குறித்த தங்கள் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் சில அதிகாரிகளும், இந்நாட்டோடு உறவாக இருப்பவர்களும், முன்னாள் புரட்சிக் குழுக்கள் தேசிய இராணுவத்துடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு இரு நாடுகளாக பிரிக்கப்படுவதற்கான முயற்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.